முதுநிலை நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இளங்கலை மருத்துவ படிப்புக்களுக்கான நீட் தேர்வு ஜூலை 17ம் தேதியும், முதுகலை மருத்துவ படிப்புக்களுக்கான நீட் தேர்வு மே 21ம் தேதியும் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டுக்கான நீட் நுழைவுத்தோ்வு தாமதமாகவே நடைபெற்றது. மேலும், கலந்தாய்வுக்கான தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டு, கூடுதல் இடங்களை ஒதுக்குவது தொடா்பாக எழுந்த பிரச்னைகள் காரணமாக மாணவா்கள் பலா், நடப்பாண்டுக்கான நுழைவுத்தோ்வுக்கு விண்ணப்பிக்கவில்லை.
கடந்த ஆண்டுக்கான முதுநிலை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இன்னும் நிறைவடையாத நிலையில் நடப்பாண்டுக்கான தோ்வை நடத்துவது முறையாக இருக்காது என்பதால் பல்வேறு தரப்பினர் முதுநிலை நீட் தேர்வை தள்ளிவைக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில்; முதுநிலை நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; முதுநிலை நீட் தேர்வை தள்ளிவைத்து மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே நீட் தேர்வை ஒத்திவைக்க கோரி எம்பிபிஎஸ் மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு 13ம் தேதி விசாரணைக்கு வருகிறது.