தனியார் பள்ளிகளில் கட்டணமின்றி, இலவசமாக படிப்பதற்கான, எல்.கே.ஜி., மாணவர் சேர்க்கைக்கு வரும், 20ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என, பள்ளிக் கல்வி துறை அறிவித்துள்ளது.
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, அனைத்து தனியார் பள்ளிகளிலும், அரசு ஒதுக்கீடாக 25 சதவீத இடங்களில், எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பில் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும்.இந்த திட்டத்தில் சேரும் மாணவர்கள், எட்டாம் வகுப்பு வரை கல்வி கட்டணம் செலுத்தாமல், இலவசமாகவே தனியார் பள்ளிகளில் படிக்கலாம்; கட்டணத்தை அரசு வழங்கும்.
இதில் சேர விரும்புவோருக்கு, வரும், 20ம் தேதி &’ஆன்லைன்&’ பதிவு துவங்க உள்ளது; மே 18 வரை விண்ணப்பிக்கலாம் என, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
மாணவர்களுக்கான விண்ணப்பங்களை, rte.tnschools.gov.in என்ற, இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பத்துடன் என்னென்ன சான்றிதழ்கள் வழங்க வேண்டும்; தகுதி என்ன என்பது குறித்து. வரும், 13ம் தேதி விரிவான விபரங்கள் வெளியிடப்படும் என, பள்ளிக் கல்வி துறை தெரிவித்துள்ளது.
இந்த சேர்க்கை குறித்து, பள்ளிகளிலும், கல்வி அலுவலகங்களிலும் மக்களுக்கு தெரியும் வகையில், அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.அதிக விண்ணப்பங்கள் வந்தால், அதிகாரிகள் மற்றும் பெற்றோர் முன்னிலையில் குலுக்கல் நடத்தி, மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.