டெல்லி, உத்தரபிரதேசம், அரியானா, மிசோரம், மகாராஷ்டிரா ஆகிய 5 மாநிலங்களில் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது. இதனால் இந்த 5 மாநிலங்களிலும் மீண்டும் கட்டுப்பாடுகளை கொண்டு வரலாமா? என்று மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்திலும் கொரோனா தொற்று சற்று உயர்ந்து இருக்கிறது. தமிழகத்தில் தற்போது 235 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில் பெரும்பாலான மாவட்டங்களில் புதிய தொற்று இல்லாவிட்டாலும் 8 மாவட்டங்களில் மீண்டும் கொரோனா அதிகரிக்கும் அறிகுறிகள் தோன்றி உள்ளன. இதையடுத்து மாவட்ட கலெக்டர்களை உஷார்படுத்தி தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-
டெல்லியில் ஏப்ரல் 4-ந்தேதி 82 என்ற அளவில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 632 ஆக உயர்ந்து இருக்கிறது. தினசரி பாதிப்பு விகிதம் ஒரு சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது. இதே போன்ற நிலைதான் உத்தரபிரதேசம், அரியானா, மகாராஷ்டிரத்திலும் காணப்படுகிறது. ஏப்ரல் 18-ந்தேதி வரை கிடைத்த புள்ளி விவர கணக்குபடி சர்வதேச அளவில் ஒமைக்ரான் தினமும் 7.45 லட்சம் பேரை பாதிக்கும் வகையில் உள்ளது. தமிழகத்தில் குறிப்பிடத்தக்க கொரோனா தொற்று மாற்றம் எதுவும் இல்லை. என்றாலும் 25-க்கும் கீழ் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 30 ஆக உயர்ந்துள்ளது. 8 மாவட்டங்களில் புதிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில் கொரோனா வைரசை நாம் முற்றிலும் தடுக்க வேண்டுமானால் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும். முகக்கவசம் அணிவது விலக்கிக் கொள்ளப்படவில்லை என்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மருத்துவமனை வளாகங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை பார்த்து விட்டு வருபவர்கள் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா பரவல் வருவதை தடுக்க வேண்டும்.
தமிழகத்தில் இன்னமும் 40 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர். 1.37 கோடி பேர் 2-வது தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர். தடுப்பூசி செலுத்தினால்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்பதை உணர செய்ய வேண்டும். தமிழகத்தில் கொரோனா பாதிப்பாளர்கள் மருத்துவமனைகளில் இல்லை. என்றாலும் உபகரணங்கள், மருத்துவ பொருட்களை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
புதிய வகை கொரோனா பரவலை கட்டுப்படுத்த தொடர்ந்து பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். மக்கள் மத்தியில் கொரோனாவை தடுப்பதற்காக அனைத்து வகையான விழிப்புணர்வு பிரசாரங்களையும் மேற்கொள்ள வேண்டும். மருத்துவமனைகளில் சேருபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் தமிழகத்தில் கொரோனா தொடர்பான கவலை வேண்டியதில்லை என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். என்றாலும் கவனமுடன் இருக்க வேண்டியது நமது கடமை. ஆகையால் பொதுமக்களை கண்காணித்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ராதாகிருஷ்ணன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.