சேலம் சிறுமியை கொடூரமாக கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

சேலம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த குற்றவாளிக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தளவாய்பட்டி ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் சாமுவேல். இவரது மகள் வினோதினி 14 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், தளவாய்பட்டி ஊராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதி வீட்டில் இருந்தபோது, சிறுமி விநோதினியை அதேபகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (25) என்பவர் பலாத்காரம் செய்து தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தார். இந்த சம்பவம் சேலம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமாரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. இதுதவிர, குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்தநிலையில், சிறுமி கொலை வழக்கில் 15 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டது. இதனால் இந்த வழக்கை விரைந்து முடிக்கும் வகையில் தினேஷ்குமாரை பலத்த பாதுகாப்புடன் போலீசார் சேலம் மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதுகுறித்த வழக்கு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் முக்கிய தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. தீர்ப்பினை நீதிபதி முருகானந்தம் வாசித்தார். அப்போது குற்றம்சாட்டப்பட்ட தினேஷ் குமாருக்கு பாலியல் குற்றத்திற்காக சிறுமியை கொடூர முறையில் கொலை செய்த சம்பவத்திற்காக மரண தண்டனை வழங்கி பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். மேலும் அபராத தொகையாக 25 ஆயிரம் ரூபாயை உடனடியாக செலுத்தவும் அந்த அபராதத் தொகை சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கு வழங்கவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். சேலம் நீதிமன்ற வரலாற்றில் நீண்ட வருடங்களுக்கு பிறகு குற்றவாளி ஒருவருக்கு மரண தண்டனை வழங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.