கோவை கல்லூரியில் 41 மாணவ-மாணவிகளுக்கு காய்ச்சல்

கோவையில் கல்லூரி மாணவர்கள் 41 பேருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று மெல்ல, மெல்ல உயர்ந்து வருகிறது. இதையடுத்து தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் கட்டாயம் முக கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அதன் மூலம் தமிழக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் கோவையிலும் கல்லூரி மாணவர்கள் 41 பேருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சரவணம்பட்டி துடியலூரில் தனியாருக்கு சொந்தமான பிசியோரதரபி கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 22ந் தேதி முதல் 24ந் தேதி வரை 3 நாட்கள் இந்த கல்லூரியில் தேசிய அளவிலான பிசியோதெரபி மாணவர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களை சேர்ந்த 1000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். 3 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு விதமான போட்டிகள் மற்றும் கருத்தரங்குகளில் கலந்து கொண்ட அவர்கள் அதன்பின்னர் திரும்பி சென்றனர்.

இந்த நிலையில் கல்லூரியில் படித்து வரும் சில மாணவ, மாணவிகளுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து மாணவ, மாணவிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கல்லூரியில் படிக்கும் 41 மாணவ, மாணவிகள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த மாணவர்களுக்கு அந்த கல்லூரி வளாகத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் கோவை மாநகராட்சி சுகாதாரத்துறையினருக்கும் தெரியவந்தது. இதையடுத்து, கோவை மாநகராட்சி நகர் நல அலுவலர் தலைமையிலான சுகாதார குழுவினர் சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு விரைந்து சென்றனர். பின்னர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளை கல்லூரியிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் கல்லூரியில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் உள்பட 83 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். பரிசோதனை முடிவில் அவர்கள் யாருக்கும் கொரோனா இல்லை என்பதை காட்டும் நெகட்டிவ் முடிவு வந்தது. இருப்பினும் அவர்கள் அனைவரையும் நாளை வரை தனிமையில் இருக்குமாறு சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் அந்த கல்லூரி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணியும் நடந்து வருகிறது.