ஈவிகேஎஸ் இளங்கோவன் தான் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்!

ஈரோடு கிழக்கு இளங்கோவன் உடல்நலம் நலிவடைந்து வருவதாக தகவல் வெளியான நிலையில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தான் நலமாக இருப்பதாக வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த மார்ச் 15ஆம் தேதி இரவு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதால், சென்னை போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதய நோய்க்கு ஏற்கெனவே சிகிச்சை பெற்றுவந்த இளங்கோவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டது. இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில் அவர் செயற்கை ஆக்ஜிசன் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது.
ஆனால் நேற்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கொரோனாவில் இருந்து மீண்டு விட்டதாகவும், இதய பாதிப்புக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சி சார்பாகவும் டுவிட்டர் பக்கத்தில், “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திரு ஈவிகேஎஸ் இளங்கோவன் நலமுடன் இருக்கிறார். விரைவில் மருத்துவமனையில் இருந்து இல்லம் திரும்ப உள்ளார். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து இளங்கோவன் பேசிய காணொலி ஒன்றும் வெளியானது. அதில், “நான் நலமுடன் இருக்கிறேன். இரு நாள்களில் வீடு திரும்புவேன்” என்று அவர் பேசியுள்ளார்.