2023-ம் ஆண்டின் சிறந்த மனிதர் விருது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைப்பு!

செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தியதற்காக செஸ் கூட்டமைப்பு சார்பில் வழங்கப்பட்ட சிறந்த மனிதர் விருது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது.

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட், இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டில், பல்லவர் காலச் சிற்பக் கலையினை பறைசாற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான மாமல்லபுரத்தில் 28.7.2022 முதல் 10.8.2022 வரை மிகச் சிறப்புடன் நடைபெற்றது. இந்த போட்டியில் சர்வதேச அளவில் 185-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் அதிகமான சதுரங்க விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 44-வது செஸ் ஒலிம்பியாட் நடத்துவதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.114 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, போட்டி நடத்த அனுமதி கிடைத்த 4 மாத காலத்துக்குள் 44-வது செஸ் போட்டிகளையும், அதன் தொடக்க மற்றும் நிறைவு விழாவை ஒலிம்பிக் போட்டிகளுக்கு இணையாக உலகமே வியக்கும் வண்ணம் மிகச் சிறப்பாக நடத்தி காட்டினார்.

இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி, இந்தியாவில் மற்ற மாநிலங்களிலும் சதுரங்கப் போட்டிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட காரணமாக விளங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அபுதாபியில் ஆசிய செஸ் கூட்டமைப்பின் சார்பில் 1.3.2023 அன்று நடைபெற்ற ஆசிய செஸ் சிறப்பு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில், 2023-ம் ஆண்டிற்கான சிறந்த மனிதருக்கான விருது வழங்கப்பட்டது. அப்போது இந்த விருதை ஆசிய செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவர் பரத் சிங் சவுகான் பெற்றுக் கொண்டார்.

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி (நேற்று) ஆசிய மற்றும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பினர் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர். மேலும், தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் சதுரங்க போட்டி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி, மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்தியதற்காக ஆசிய செஸ் கூட்டமைப்பின் சார்பில் வழங்கப்பட்ட 2023-ம் ஆண்டிற்கான சிறந்த மனிதருக்கான விருது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் கபூர், துணைத் தலைவர் பவேஷ் பட்டேல், செயலாளர் விபினேஷ் பரத்வாஜ், பொருளாளர் நரேஷ் ஷர்மா ஆகியோர் உடனிருந்தனர்.