தென்னிலங்கை நெருக்கடி- தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும்

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன், நெருக்கடி நிலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கான ஆதரவை தெரிவித்திருந்தார். அது தொடர்பில் சர்ச்சைகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதற்கு பதிலளித்திருக் கின்றார். அதாவது தனது நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால், அவருக்கு ஆதரவு வழங்கத் தயராகவுள்ளாரெனக் குறிப்பிட்டிருக்கின்றார். இங்கு கவனிக்க வேண்டிய விடயம் – ரணில் விக்கிரமசிங்க எந்தவொரு தமிழ் கட்சியிடமும் ஆதரவைக் கோரவில்லை. அதற்கான தேவையும் இப்போதில்லை. பொதுஜன பெரமுன அரசாங்கத்தையே அவர் கொண்டு நடத்தவுள்ளார். இந்த விடயங்களை விளங்கிக் கொண்டுதான் தமிழ் கட்சிகள் விடயங்களை அணுக வேண்டும்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கும், விக்னேஸ்வரனுக்கும் இடையில் ஓர் ஒற்று மையுண்டு. அதாவது, இருவருமே பாராளுமன்றத்தில் ஒரேயோர் ஆசனத் தையே வைத்திருக்கின்றனர். ஆனால், ஓர் ஆசனத்தை கொண்டு, ரணில் பிரதமராகியிருக்கின்றார். அது விக்கிரமசிங்கவின் புத்திக்கூர்மைக்கு கிடைத்த சன்மானம். தமிழ்த் தேசியப் பரப்பில் பாரதூரமான தலைமைத்துவ வெற்றிடம் இருக்கின்றது. இதனை சரிசெய்ய முடியாதவர்களே மறுபுறமாக இடைக்கால அரசியல் தீர்வு தொடர்பில் பேசி வருகின்றனர். குறிப்பாக சம்பந்தனுக்கு பின்னரான கூட்டமைப்பின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கின்றது. பங்காளிக் கட்சிகளால் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தைக் கொண்டு செல்லக்கூடிய நிலைமை இல்லை.

இந்த நிலையில் ஓர் ஆசனத்துடன் கட்சியை நடத்தும், விக்னேஸ்வரனுக்கான இடம் என்பது, அடுத்த தேர்தல் வரையில்தான். அடுத்த தேர்தலில் அவர் தோல் விடைந்தால் அல்லது, ஒருவேளை அவர் போட்டியிடாது பிறிதொருவர் பரிந்து ரைக்கப்பட்டு, அவர் தோல்விடைந்தால், விக்னேஸ்வரனின் கட்சியின் கதை முடிவுக்கு வந்துவிடும். இந்த நிலையில், விக்னேஸ்வரன் பதவியிலிருக்கும் இன்றைய காலம்தான், அவர் உச்சளவில் செயல்படுவதற்கான காலமாகும். இந்தக் காலத்தை, தமிழ் அரசியலை பலப்படுத்துவதற்கு எந்தளவுக்கு பயன்படுத்தலாம் என்பது தொடர்பில்தான் அவர் சிந்திக்க வேண்டும்.

தமிழ்த் தேசிய பரப்பிலுள்ளவர்களை ஒருங்கிணைப்பதற்கான ஒரு புள்ளியாக விக்னேஸ்வரன் தொழில்படலாம். அதற்கு தன்னிடமுள்ள ஓர் ஆசனத்தை அவர் பயன்படுத்தலாம். ஒரு பரந்த கூட்டை உருவாக்குவதில் அவர் வெற்றி பெற்றால், அதற்கான தற்காலிக தலைமைத்துவத்தைக்கூட அவர் பெற வாய்ப்புண்டு. ஆனால், இந்த விடயங்கள் ஒருபோதும் தலைமைத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு, முன்னெடுக்கவும்கூடாது.

தென்னிலங்கை ஒரு நெருக்கடிக்குள் இருக்கின்றது என்பது எந்தளவுக்கு உண்மையோ, அதேயளவிற்கு உண்மை, தமிழர்கள் பலமாக இல்லையென்பதுமாகும். அப்படிப் பார்த்தால், தமிழர்களும் நெருக்கடிக்குள்தான்
இருக்கின்றனர்.

தமிழர்கள் பலமாக இருத்தல் என்பது, தமிழ் மக்கள் – சூழ்நிலைகளை கணித்து, அதற்கேற்ப பேரம் பேசக்கூடிய வலுவானதொரு தலைமைத்துவத்தை கொண்டிருப்பதாகும். அவ்வாறானதொரு தலைமைத் துவம் உருவாகும் வரையில் மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுமே, ஒரு தற்காலிக ஏற்பாடுகள்தான். ஏனெனில், அதற்கு மேல் தற்போதுள்ள அரசியல் கட்சிகளால் பயணிக்கவே முடியாது.

பேரம் பேசுவதற்கு பலமாக இருப்பது அடிப்படையான தகுதியாகும். இல்லாவிட்டால், தமிழர்களுக்கு ஒரு பலமான நாட்டின் பின்புலம் அவசியம். ஒரு பலமான நாட்டின் ஆதரவிருக்கின்றபோது, பலவீனமாக இருப்பது ஒரு பிரச்னையில்லை. ஏனெனில், பலவீனமான நிலையிலிருக்கும் எங்களை பலப்படுத்தும் நோக்கில்தான், அந்த பலமான நாடு இருக்கின்றது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவ்வாறான சூழலும் இல்லை. தமிழர்களுக்கு ஆதரவாக எந்தவொரு பலமான நாடும் இல்லை. அதாவது, முற்றிலும் தமிழரின் நியாயத்தை ஏற்றுக்கொண்டு, தமிழர்களுக்காக செயல்படும் நாடு ஒன்றுமில்லை. இதில் முதன்மையான பங்கை ஆற்றக் கூடிய ஒரேயொரு நாடான இந்தியா, சிங்களவர்களை விரோதித்துக் கொள்ளாத கொள்கையைக் கடைப்பிடிக்க விரும்புகின்றது. எனவே, பலமான நாடுகளின் மூலம், வாய்ப்புக்கள் உருவாகுமென்று எண்ணிக் கொண்டிருப்பது இலவு காத்த கிளிக் கதையாகிவிடலாம்.

இந்த நிலையில் பலமாக இருத்தல் என்னும் சிந்தனையின் அடிப்படையில், ஆகக் குறைந்தது தற்போது இயங்குநிலையிருக்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் வருவதும், அரசியல் யாப்பில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களை உச்சளவில் பயன்படுத்திக் கொள்வதும்தான் இன்றைய நிலைக்கு ஏற்புடையது. இப்போது இது ஒன்றுதான் சாத்தியமானது. இதைத் தவறவிட்டால், இந்த நெருக்கடி நிலைமை தணிகின்றபோது, தமிழரின் விடயம் முற்றிலுமாக நீர்த்துப்
போய்விடும்.

தென்னிலங்கையின் அரசியல் கொந்தளிப்பு தமிழர்களுக்கு எவ்வகையான மாற்றங்களை ஏற்படுத்தும் – ஏற்படுத்துமா – என்னும் கேள்விகள் தமிழ் சூழலிலுண்டு. மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகிய தைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் குழப்பநிலையை சரி செய்யும் நகர்வுகள் இடம்பெற்றுவருகின்றன. ஒரு புறம் ‘கோட்டா கோ ஹோம்’-போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வை பதவி விலகுமாறு கோரிவருகின்றனர்.

புதிய பிரதமர் தொடர்பில் இப்போதைக்கு தமிழர் விவகாரம் ஒரு விடயமாக இருக்கப் போவதில்லை. ஏனெனில், இடைக்கால அரசாங்கத்தின் முதல் பணி, பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்களை ஓரளவு மூச்சுவிடச் செய்வதுதான். அது அவசியமான பணியென்பதில் முரண்பட ஏதுமில்லை. ஏனெனில், மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் மூச்சுவிட வேண்டியிருக்கின்றது.

ஆனால், தமிழர் அரசியலை பொறுத்தவரையில், எந்தவொரு புதிய மாற்றங்களும் ஏற்படப்போவதில்லை. அதற்கான வாய்ப்புக்களும் இல்லை. அடுத்த ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தலுக்கு பின்னர்தான், சில மாற்றங்களை எதிர்பார்க்க முடியும். இதற்கிடையில், நிறை வேற்றதிகாரத்தை குறைக்கும் யோசனை முன்வைக்கப்பட்டால், அந்த யோசனையுடன் மாகாண சபையை சுயாதீனமாக இயங்கச் செய் வதற்கான, சில ஏற்பாடுகள் தொடர்பில் கூட்டமைப்பு சில கோரிக்கைகளை முன்வைக்கலாம். இது தவிர, வேறு எதனையும் தமிழர்கள் எதிர்பார்க்க முடியாது.

இலங்கையின் அரசியலில் அடிப்படையான கட்டமைப்புசார் மாற்றங்கள் ஏற்பட்டாலன்றி, எதனையும் செய்ய முடியாது. அவ்வாறான அடிப்படையான மாற்றங்கள் எவையும் உடனடியாக நடக்கப் போவதில்லை. ஏனெனில், அதற்கான அரசியல் புரிதலுடன் ஒரு புதிய சிங்கள தலைமுறை வெளியில் வரவில்லை. இப்போது வெளியில் வந்திருக்கும் தலைமுறை, அடிப்படையில் ராஜபக்ஷ குடும்பத்தின் ஆட்சிக்கு எதிரானது. அவர்களால் தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டோம், என்னும் ஆவேசத்தில் இருக்கும் தலைமுறை.

பொருளாதார நெருக்கடி பாரதூரமாக அவர்களை தாக்காதிருந்திருந்தால், இந்தளவிற்கு ராஜபக்ஷக்களுக்கு எதிராக அவர்கள் திரும்பியிருக்க மாட்டார்கள். தொடர்ந்தும் ராஜபக்ஷக்களின் இனவாத, பௌத்த மாயைக்குள் சிக்குண்டு, தமிழர்களை மட்டுமே விரோதிகளாக சிந்தித்திருப்பர். ஆனால், இப்போது தாங்கள் இனவாதத்தின் பெயரால், மதவாதத்தின் பெயரால், ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்னும் குற்றவுணர்வும், ஆவேசமுமே அவர்களிடம் மேலோங்கியிருக்கின்றது. இந்த ஆவேசம் அடங்கியவுடன், அவர்கள் மீளவும் பழைய அரசியல் முறைமைக்குள் காணாமல் போய்விடலாம். ஏனெனில், அடிப்படையான மாற்றங்கள் தேவையென்னும் நோக்கில் அவர்கள் ஒன்றுபடவில்லை. அதற்கான தலைமைத்துவமும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

ஆனால், இனவாதம் – மதவாதத்தை கடந்து சிந்திக்க வேண்டு மென்னும் புரிதல் படித்த சிங்கள இளைஞர்கள், யுவதிகள் மத்தியில் ஏற்பட்டிருப்பது உண்மைதான். ஆனால், அவற்றுக்கான அரசியல் தலைமைத்துவத்தை வழங்கப் போவது யார் -என்னும் கேள்வியில்தான், அவர்களின் எதிர்கால செயல்பாடுகள் தங்கியிருக்கின்றன.
எனவே, இன்றைய நிலையில், தமிழர் பிரச்னையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படப் போவதில்லை. மேலும் எதிர்காலத்திலும் அதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தமிழர் தலைமைகள் சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்கின்றனர் – அதற்காக எவ்வாறு ஒற்றுமையுடன், தந்திரோபாயமாக செயலாற்றுகின்றனர் என்பதில்தான், விடயங்கள் தங்கியிருக்கின்றன.