காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரை ஒட்டி விமான நிலையம் அமைய இருக்கும் கிராமப் பகுதிகளில் காவல்துறையினர் தீவிரமான கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிராமங்களை இணைக்கும் முக்கியச் சாலையில் ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இது தங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக கிராம மக்கள் கூறுகிறார்கள்.
தங்கள் பகுதியில் தேவையில்லாமல் காவல்துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், ஊடகத்தினர் பலரை வரவிடாமல் தடுப்பதாகவும் மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்காகவும், சமூக விரோதிகள் ஊடுருவிவிடாமல் தடுப்பதற்காகவும்தான் கண்காணிப்பில் ஈடுபடுவதாக மாவட்ட நிர்வாகம் கூறுகிறது.
பரந்தூர் விமான நிலையத்துக்காக தங்களுடைய விளைநிலங்கள், வீடுகள், கோவில்கள், பள்ளிக்கூடங்கள், நீர்நிலைகள் ஆகியவை அழிக்கப்பட இருப்பதாகக் குற்றம்சாட்டும் கிராம மக்கள் அரசுக்கு தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.
விமான நிலையத்துக்காக கையப்படுத்தப்பட இருப்பதாகக் கருதப்படும் ஏகனாபுரம் கிராமத்தில் மக்கள் 60 நாள்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள் உள்ளிட்டோரிடம் முறையிட்டும் தங்களுக்கு ஆதரவாக எதுவும் நடக்கவில்லை என இங்குள்ள மக்கள் கூறுகிறார்கள்.
காவல்துறை கண்காணிப்பு எப்படி இருக்கிறது?
பரந்தூரில் விமான நிலையம் அமைய இருப்பதாகக் கருதப்படும் பகுதியில் ஆங்காங்கே காவல்துறையின் வேகத் தடுப்புகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அங்கு காவல்துறையைச் சேர்ந்தவர்கள் சீருடையிலும், சாதாரண உடையிலும் பணியில் இருக்கிறார்கள். மதுரமங்கலம் சாலை சந்திப்பில் இருந்து பரந்தூர் வரையிலும் காவல்துறையின் கண்காணிப்பு இருக்கிறது.
செய்தி சேகரிக்கச் சென்ற இடங்களில் எல்லாம் சீருடை அணியாத காவலர்கள் பின்தொடர்ந்து வந்தார்கள். ஓர் இடத்தில் வாகனத்தை தடுத்து நிறுத்தி யார், எதற்காக வந்திருக்கிறீர்கள், அடையாள அட்டை எங்கே என்ற கேள்விகளை எழுப்பினார்கள்.
எதற்காக இந்தச் சோதனை என்று கேட்டபோது, “இது வழக்கமான சோதனைதான். மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்திருக்கிறது,” என்று காவலர் ஒருவர் கூறினார்.
நெல்வாய் கிராமத்தில் மக்கள் சிலரைச் சந்தித்துப் பேட்டி எடுத்தபோது அங்கும் நான்கைந்து காவலர்கள் சூழ்ந்து நின்றார்கள். எடுக்கும் காட்சிகளையும் பேட்டிகளையும் தங்களது செல்போன்களில் காவலர்கள் பதிவு செய்து கொண்டார்கள்.
காவலர்கள் சூழ்ந்திருப்பதால் அச்சமாக உணர்வதாகவும் பேட்டியளிக்க முடியவில்லை என்றும் நெய்வாய் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். பரந்தூர் விமான நிலையப் பணிகளுக்காக முழுமையாக கையகப்படுத்தப்படுவதாகக் கருதப்படும் கிராமங்களுள் நெல்வாயும் ஒன்று.
ஏகனாபுரம் கிராமத்திலும் காவலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். “செய்தி சேகரிக்க யார் வந்தாலும் அவர்களை காவலர்கள் பின் தொடர்கிறார்கள். அடையாள அட்டைகளைச் சோதிக்கிறார்கள். யூட்யூப் சேனலை சேர்ந்தவர்களை ஊருக்குள் அனுமதிப்பதில்லை” என்று ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் பிபிசி தமிழிடம் கூறினார்.
“எங்கள் ஊருக்குள் செல்வதற்கே ஆதார் போன்ற அடையாள அட்டைகளைக் காட்டிய பிறகே செல்ல வேண்டியிருக்கிறது. ஊருக்கு வெளியே மாத்திரமல்லாமல் ஊருக்குள் வந்து தெருக்களிலும் காவலர்கள் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கண்காணிப்பை நீக்க வேண்டும்” என்று ஏகனாபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறினார்.
“ஒன்றிணைவதற்குத் தடை”
அண்மையில் ஏகனாபுரம் கிராமத்தில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பதற்காகச் செல்ல முயன்றபோது தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் செங்கல்பட்டு மாவட்ட எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார்.
இதுபற்றி பேசிய அவர், “13 கிராம மக்களும் ஒன்றிணைந்து போராடுவதற்கு காவல்துறை தடைபோடுகிறது. இதற்கு முன்பு ஏகனாபுரம் கிராமத்துக்கு செல்ல முயன்றபோது இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலேயே காவல்துறையினர் தடுத்துவிட்டார்கள். அரசு கூறுவது போல நீர்நிலைகளுக்கு பாதிப்பு இல்லை என்றால் எங்களை ஊருக்குள் விடுவதற்கு ஏன் தடை விதிக்கப்படுகிறது? ” என்று கேள்வி எழுப்பினார்.
இதேபோல கிராமத்துக்குச் செல்வதில் தனக்கு மறைமுகத் தடை இருப்பதாக சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் ஓர் அமைப்பைச் சேர்ந்தவர் பிபிசி தமிழிடம் கூறினார்.
அண்மையில் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்த மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “கிராமங்களில் போலீஸ் முகாம் அமைத்து மக்களுடைய அன்றாட நடவடிக்கைகளை முடக்குவது, அச்சுறுத்துவது போன்றவை அரசுக்கு அவப்பெயரையே ஏற்படுத்தும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
“மக்களின் ஒப்புதலுடன்தான் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். மக்களை சந்திக்கவிடாமல் செய்வது சரியல்ல” என்று கூறினார்.
மாவட்ட நிர்வாகம் என்ன கூறுகிறது?
பரந்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்களும், அங்கு வரும் ஊடகத்தினர், தலைவர்கள் உள்ளிட்டோர் கண்காணிக்கப்படுவது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எம். சுதாகரிடம் கேட்டபோது, “சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. நானும் இந்தப் பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்கிறேன். ஊடகத்தினரிடம் மக்கள் பேசும் போது காவலர்கள் அருகே நிற்கக்கூடாது என அறிவுறுத்திவிடுகிறோம்” என்றார்.
காவல்துறையின் கண்காணிப்பால் சிறிய குற்றங்கள் குறைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்பைவிட இப்போது காவல்துறையினரின் எண்ணிக்கையை குறைத்து இருப்பதாகக் தெரிவித்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் எம். ஆர்த்தி, “நிலைமையைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் யாரும் நுழைந்துவிடக்கூடாது என்பதைத் தடுப்பதற்காகவே இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறோம்” என்றார்.
“மக்கள் அப்பாவிகள். சில அமைப்புகள் அவர்களைத் தூண்டிவிட முயற்சி செய்கின்றனர். அரசுடன் பேச்சு நடத்துவதற்கு மக்கள் முன்வந்து நிலைமை சாதாரணமாகும் போது காவல்துறையின் இருப்பு குறைந்து விடும்.” என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
“கருத்து சுதந்திரத்தில் எப்போதும் தலையிட மாவட்ட நிர்வாகம் விரும்பவில்லை. மக்கள் என்ன விரும்புகிறார்களோ அதை பேசுவதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. ஊடகம் என்ற பெயரில் ஊடகம் அல்லாத சிலர் ஊர்களுக்குள் நுழைந்து மக்களைத் தூண்டி விட முயற்சி செய்கிறார்கள் அதை கண்காணிக்கவே ஆங்காங்கே காவல்துறையினர் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். கள்ளக்குறிச்சி போன்ற சம்பவங்கள் ஏதும் நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு” என்று அவர் கூறினார்.
பரந்தூர் விமான நிலையம் பின்னணி
சென்னையில் இருந்து சுமார் 65 கிலோ மீட்டர் தொலைவில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க இரு மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. “பரந்தூரில் அமையவிருக்கும் புதிய விமான நிலையத் திட்டத்தை செயல்படுத்துவது என்பது நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கானப் படிக்கட்டு. தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் (ஒரு லட்சம் கோடி) டாலர் பொருளாதாரமாக உருவாக்கும் உயர்ந்த குறிக்கோளை எட்டுவதற்கானப் பயணத்தில் இது மற்றொரு மைல் கல்லாகும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.
விமான நிலையத்துக்காக பரந்தூரை ஒட்டியிருக்கும் 13 கிராமங்களில் 4,500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் நிலம் எடுக்கப்படும் என்றும் 4 கிராமங்கள் முற்றிலுமாகக் கையகப்படுத்தப்படும் என்றும் தெரியவந்திருக்கிறது. குடியிருப்புகள், நீர்நிலைகள், விவசாய நிலங்கள் போன்றவை இதில் அடங்கியிருக்கின்றன. நிலம், குடியிருப்புகளுக்கு ஏற்பக மூன்றரை மடங்கு இழப்பீடு தருவதாக அரசு அறிவித்திருக்கிறது.
இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏகனாபுரம் கிராமத்தில் 60 நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்று வருகின்றனர். “ஊரைவிட்டு வெளியேற மாட்டோம்” என்று போராட்டத்தில் பங்கேற்கும் மக்கள் கூறுகிறார்கள்.