பாரம்பரிய நகைகள் பற்றி..

உணவு, உறவு என எதன் மீதான மோகமும் காலப்போக்கில் அலுத்துப் போகும். வாழும் காலம் முழுக்க அலுக்காத, ஆசை குறையாத ஒரு விஷயம் நகை. எத்தனை இருந்தாலும் இன்னொன்றுக்கு ஏங்க வைக்கும். அந்தக் காலத் தங்க நகைகள் எப்படியிருந்தன, ஒவ்வொன்றையும் அணிந்த நோக்கமென்ன என்பதை விளக்கவே இது..

கோவில் கலையின் தாக்கத்தில் உருவானது தான் தென்னிந்திய நகைகளின் சிறப்பான டிசைன்கள். கோவில் நகைகள் என அழைக்கப்பட்ட இவற்றை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் தலைமை நகை தயாரிப்பாளர்கள் உருவாக்கினர். இவை கோவில்களில் உள்ள ஆண் தெய்வங்களுக்கும், பெண் தெய்வங்களுக்கும் அணிவிக்கப்பட்டன. அப்போதைய மன்னர்கள் இக்கலையை ஆதரித்தனர். பின்னர் கோவில்களில் இருந்த நடன மாதர்கள் அணிந்தனர்.

இன்றைய நிலையில் பாரம்பரியம் மிக்க இந்த டிசைன்கள் கோவில் வளாகத்தை விட்டு வெளியேறி, பரத நாட்டிய நடனக் கலைஞர்களால் ஆதரிக்கப்பட்டு வருகிறது. நவீன காலத்துக்கு ஏற்ப இந்த நகைகளில் சிறிய மாற்றங்கள் செய்யப்படுகின்றன. தென்னிந்தியாவில் மணமான பெண்கள், மணமானதைக் குறிக்கும் வகையில் சில வகை நகைகளை அணிகின்றனர்.

தாலி :

ஜாதி, மதத்துக்கு ஏற்பவும், பல்வேறு டிசைன்களிலும் தென்னிந்தியாவில் பெண்கள் தங்கத்தினால் ஆன தாலியை அணிகிறார்கள். கேரளப் பெண்கள் அணியும் தாலியில் கோபுரச் சின்னம் இருக்கும். தாலி அல்லது மாங்கல்யம் என அழைக்கப்படும் இந்த நகையை கல்யாணமான பெண்கள் சாகும் வரை அல்லது கணவர் இறக்கும் வரை கழட்டவே கூடாது. ஆரம்ப காலங்களில் மிருகங்களின் பற்கள், கால் நகங்களின் உருவத்தில், பாதுகாப்புக்காக அணியப்பட்டன. பின்னர் இவை கல்யாணச் சடங்குடன் சேர்ந்து கொண்டது.

நெக்லெஸ் :

கலாட்டா உரு – அத்தனம் எனப்படும் கை போன்ற டிசைன்களில், நான்கு விதமான பெண்டன்ட்கள் இருக்கும். கை வடிவத்தில் இருக்கும் இவை, அணிபவர்களுக்கு பாதுகாப்பை அளிக்கும் வகையில் புலி நகத்தின் வடிவில் இருக்கும். மத்தியில் உள்ள பதக்கத்தில், செல்வத்தின் கடவுளான லெட்சுமியின் உருவம் பதிக்கப்பட்டிருக்கும். லெட்சுமி அத்தனம் என அழைக்கப்படும்.

காசுமாலை :

கழுத்தில் இருந்து இடுப்பு வரை தொங்கும் தங்கக் காசுகள் கோர்க்கப்பட்ட ஆபரணம்தான் காசுமாலை. நகைகளில் தங்க காசை பயன்படுத்துவது சேமிப்பாகவும், செல்வத்தைக் காட்டுவதாகவும் காசுமாலை அமைந்துள்ளது.

முல்லை மொட்டு மாலை :

மல்லிகை மொட்டுக்களைப் போல தங்கத்தில் செய்து அணியும் செயின்தான் முல்லை மொட்டு மாலை. தொடர்ந்து பிரபலமாக இருந்து வரும் இந்த நகை, இப்போது நாடு முழுவதும் அணியப்பட்டு வருகிறது.

தலைமுடி ஆபரணம் :

ஜடை-ஹு எனப்படும் இது தென்னிந்தியாவில் மட்டுமே பிரபலமான நகையாகும். தங்கத்தால் ஆன இதை தலையிலும், நெற்றியிலும் அணிவார்கள். சூரியன், சந்திரன், மலர், மீன் உருவங்களில் இது இருக்கும்.

காதணிகள் :

தென்னிந்தியாவின் காதணிகளில் தண்டட்டி, முடிச்சு, பாம்படம் என பல வகைகள் உள்ளன. முடிச்சு, பாம்படம் போன்ற நகைகளை தமிழ்நாட்டில் மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள வேளாளர் இனப் பெண்களும் பயன்படுத்துகிறார்கள். சதுரம், செவ்வகம், முக்கோணம் என பல்வேறு வடிவங்களில், பல்வேறு விதமான டிசைன்களில் இவை அணியப்படுகின்றன.

தண்டட்டி :

காது துளைகளை பெரிதாக்கிக் கொள்ள மரத்துண்டுகளை பயன்படுத்தும் பழக்கம் தான் மாறி, தண்டட்டி அணிவது புழக்கத்துக்கு வந்தது. தங்க நகைகளுக்குள் மெழுகு அடைக்கப்பட்டு உருவாக்கப்படும் இது திருமணத்துக்கு பின்பு பெண்களுக்கு அளிக்கப்படுகிறது.

பாம்படம் :

பாம்பின் தலையைப் போன்று உள்ள பாம்படம் சதுரம், உருளை, முக்கோணம் போன்ற டிசைன்களில் அணியப்படுகிறது.