நற்பண்புகள் தானாக வளர..

நாய் குட்டியை வீட்டில் வளர்ப்பது நல்லதா-கெட்டதா? உயரிய பண்புகள் குழந்தைகளிடம் சிறுவயதிலேயே வளர வழிகள் உள்ளதா?

மனித இனத்தை தவிர்த்து, குழந்தைகள் விரும்பும் மற்ற உயிரினங்களுடன் பழகும் வாய்ப்பு இருந்தால் உயரிய பண்புகள் வளரும். எனவே மேற்கண்ட இரண்டு கேள்விகளுக்கும் ஒருங்கே விடையளிக்கும் விதத்தில், தாவரங்களும் – விலங்குகளும் மனிதனுக்கு என்னென்ன நற்பண்புகளை கற்றுக் கொடுக்கின்றன என்பதை பார்ப்போம்.

நீண்ட காலமாக தோட்டத்தை பராமரித்து வந்த தோட்டக்காரர் ஏதோ காரணங்களுக்காக பணிக்கு வரவில்லை. இரண்டொரு நாட்கள் வரை பொறுத்துப் பார்த்த தோட்டத்தின் சொந்தக்காரர், “அதிக சம்பளம் தருகிறேன்” உடனே தோட்டப் பணிகளை கவனி என்று தோட்டக்காரரை பணிக்கு அழைத்தார். அவரோ முதலாளியிடம் பணி செய்ய முடியாத சூழ்நிலையை விளக்குகிறார். இரண்டொரு நாட்களுக்குப் பின்னர் தோட்டக்காரருக்கு அதன் உரிமையாளர் கடிதம் எழுதினார். “மரங்களும், செடிகளும் வாடுகின்றன, காய்கள் கனியாகவில்லை, பண்பாடும் பறவைகள் மவுனம் சாதிக்கின்றன, தோட்டமே உங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறது” என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். கடிதத்தை படித்ததும் மனமாறுதல் அடைந்து, தோட்டக்காரர் பணியில் சேர்ந்தார்.

தோட்டக்காரருக்கும், தாவரங்களுக்கும் உள்ள ஒருங்கிணைந்த அன்பின் வெளிப்பாட்டைத்தான் இந்த எடுத்துக்காட்டு உரைக்கிறது.

“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலாரின் வாக்கியமும் இந்த அன்பினைத்தான் சுட்டுகிறது. இசைக்கும், தாவரத்துக்கும் தொடர்பு உண்டு என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மனிதனுக்கும், தாவரங்களுக்கும் இடையே உள்ள பிணைப்பை அதிகப்படுத்த வேண்டும். இதற்கு தாவரங்கள் தயாராக இருக்கின்றன. நெருக்கடி நிறைந்த வேலைகளுக்கு மத்தியில், சிறிதளவு நேரத்தை தாவரங்களுடன் உறவாட செலவழித்தால், மனதிற்கு புத்துணர்ச்சியையும், அமைதியையும், மன அழுத்தத்திற்கு மருந்தையும் தாவரங்கள் தரும். குறிப்பாக பள்ளிப் பருவத்திலேயே தோட்டக்கலையில் மாணவர்கள் ஆர்வம் காட்டினால், படிக்கும் நேரம் தவிர மீதமுள்ள காலங்களை பயனுள்ளதாக செலவிட முடியும். வாழ்வியல் உண்மைகளை புரிந்து கொண்டு, பிற உயிர்களையும் புரிந்து கொண்டு வாழும் பக்குவமும் இயற்கையாகவே அதிகரிக்கும். கோபம், சோம்பல் போன்றவைகள் மாறி, அன்பு-கருணை போன்ற நற்பண்புகள் கூடவே மலரும்.

இப்போது சில குழந்தைகளுக்குள் கேள்வி எழுந்திருக்கும். அடுக்குமாடிக் குடியிருப்பான எங்கள் வீட்டில் தோட்டத்தை எப்படி அமைப்பது? என்பதுதான் இந்த “வாண்டூஸ்” மனதில் எழுந்த அந்த கேள்வி.

வீட்டைச் சுற்றி தோட்டம் அமைக்க வாய்ப்பில்லாதவர்கள், வீடுகளில் பூச்செடிகளை உருவாக்கி பராமரித்து வந்தாலே, தாவரங்களின் அர்ப்பணிப்பு குணத்தை உணர்ந்து கொள்வீர்கள். ஒரு மாத காலம் அக்கறை செலுத்தி கவனித்தபின், நீங்கள் இரண்டு-மூன்று நாட்கள் அதனை பிரிய நேர்ந்தால், உங்கள் மனதில் பூச்செடிகளின் நினைப்பு தானாகவே வந்துவிடும். இதுவே குழந்தைகளாகிய உங்களுக்கும், தாவரங்களுக்கும் இருக்கும் அன்பின் வெளிப்பாடு.

கோமாதாவாகிய பசுவை வணங்குதல், கால்நடைகளுக்காக விழா எடுத்தல், இறைவனின் வாகனமாக கருதப்படும் விலங்குகள்-பறவைகளை போற்றுதல், செல்லப் பிராணிகளை வளர்த்தல் என்று காலம் காலமாக, விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் அன்பு சார்ந்த தொடர்பு இருந்து வருகிறது.

சிங்கம், புலி, சிறுத்தை போன்ற விலங்குகளை கண்டால் உடல் உதறத்தான் செய்யும். ஆனால் அவை வாழும் சூழலுக்கு நாம் தீங்கு செய்யாதவரை, கொடிய விலங்காக இருந்தாலும், அவை மனித குலத்திற்கு நண்பர்கள்தான். நாம் அதன் பாதுகாப்புக்கு இடையூறு செய்யும் போது, தன்னை தற்காத்துக் கொள்ள நம்மை நோக்கி சீறுகிறது.

“காக்கை குருவி எங்கள் ஜாதி” என்ற முண்டாசுப் புலவன் பாரதியின் விசாலமான பார்வை வரிகள், மற்ற உயிர்களுக்கும் மதிப்பளிக்கத் தூண்டுகிறது. அவசர உலகில் ஏதோ ஒன்றைத் தேடி சுழன்று கொண்டிருக்கும் மனிதர்களின் மனதை, செல்லப் பிராணிகள் கண நேரத்தில் மாற்றிவிடும். பணிகளை முடித்துவிட்டு, சோர்ந்து போய் வீட்டிற்கு வந்து கதவை திறக்கும் போது, பாசத்துடன் ஓடிவந்து கால்களைச் சுற்றும் நாய்-பூனையைப் பார்க்கும் போது சோர்வு சட்டென்று மறைந்து, மனதில் புத்துணர்ச்சி குடியேறுவதை அனுபவப் பூர்வமாக பலர் உணர்ந்திருப்பர்.

குழந்தைகள், விலங்குகள்-பறவைகளிடமும் பழகலாம். பாசம் வளர்க்கலாம். உளவியல் ரீதியாக ஆராய்ந்து பார்த்தால் செல்லப் பிராணிகளை வீட்டில் வளர்ப்பதால் பல நன்மைகள் கிடைக்கிறது. வண்ண மீன்களை தொட்டியில் வளர்த்து அதனை கவனிப்பதும் அன்பின் வெளிப்பாடுதான்.

வளர்க்கப்படும் தாவரங்களும்-செல்லப் பிராணிகளும் நாம் காட்டும் அன்பைவிட, பலமடங்கு நன்றியுணர்வை நம்மீது வைத்திருக்கின்றன. உயிரினங்களுக்குள் ஏற்படும் இந்த ஒற்றுமையினால் அன்பு செலுத்தும் பண்பு அனைவரிடத்திலும் விரிவடைகிறது என்பதே நிதர்சனமான உண்மை.

– ப. சுரேஷ்குமார்