குழந்தையின் எதிர்காலம் ஒளிமயமாக..!

ஹோம் ஒர்க் என்ற சொல்லைக் கேட்டவுடன் ஓடி ஒளியும் குழந்தைகள்தான் அதிகம்! அடுத்த நாள் பள்ளியில் ஆசிரியர்கள், அவர்களை தண்டிக்கிறார்கள். இதனால் அவர்கள் மெள்ள மெள்ள படிப்பில் பின் தங்கி விடுகின்றனர்.

ஹோம் ஒர்க் பற்றி விபரங்களை தினமும் அறிந்து கொள்வது பெற்றோரின் கடமையாகும். நீங்களும் குழந்தைகளோடு அமர்ந்து, அவர்களை ஹோம் ஒர்க் செய்ய வைக்கவும். அவர்கள் ஹோம் ஒர்க் செய்யும்போது அவர்களோடு அமர்ந்து ஏதேனும் புத்தகம் படிக்கவும். அல்லது ஹோம் ஒர்க்கில் அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கவும்.

குழந்தைகளுக்காக ஒரு டைம் டேபிள் போட்டு, அதில் படிப்பதற்கும் விளையாடுவதற்கும் தனித்தனியாக நேரத்தை ஒதுக்கவும். விளையாடும் நேரத்தில், அவர்களை விளையாட விடவும். படிக்க வேண்டிய நேரத்தில், அவர்களை படிக்கச் செய்யுங்கள். ஹோம் ஒர்க் செய்யும் நேரத்தில் டி.வி., ரேடியோ போன்றவற்றை போடாதீர்கள். குழந்தைகளின் கவனம் படிப்பின்மேல் செல்லாமல் திசை திரும்பக்கூடும்.

குழந்தைகளுக்காக ஒரு நோட்புக் தயார் செய்து அதில் அவர்கள் செய்த ஹோம் ஒர்க்கைப் பற்றி எழுதி வைக்கவும். அவர்கள் செய்யாத வேலை பற்றியும் குறித்து வைக்கவும். அடிக்கடி குழந்தைகளின் பள்ளிக்கு சென்று அவர்களைப் பற்றி ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். அவர்கள் படிப்பின் முன்னேற்றத்தை பற்றி தகவல் அறியுங்கள்.

உங்கள் குழந்தை எந்தப் பாடத்தில் வீக்காக உள்ளதோ, அதற்கு தனியே ட்யூஷன் வைக்கலாம். அதை கவனிக்காமல் விட்டுவிட்டால் பின்னர் அந்தப் பாடத்தில் அக்குழந்தையால் முன்னேற்றம் அடைய முடியாது.

நாளை உங்கள் குழந்தை வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைத்தால், இன்றே அதற்கு அஸ்திவாரம் போடவும். உங்கள் குழந்தையின் எதிர்காலம் ஒளிமயமாக அமையும்!