கோடைக்கால அழகுப் பராமரிப்பு!

நமது நாட்டுத் சீதோஷ்ண நிலை பெரும்பாலும் வெப்பமாகவே இருக்கும். கடும் கோடைக் காலத்தில் இந்த நாள்களை எப்படிக் கழிக்கப் போகிறோம் என்ற பயம் ஒவ்வொருவருக்கும் எழுவது இயற்கை. நமது முன் ஜாக்கிரதையாலும், அழகு, ஆரோக்கியம் குறித்த அடிப்படை விழிப்புணர்ச்சியாலும் கோடை காலத்தைப் பிரச்சினையில்லாது சுலபமாகச் சமாளித்து விடலாம்.

நமது சருமத்தில் நிறத்தைத் தீர்மானிக்கும் நிறமிகள் (Melanin pigments) உள்ளது. அதிக நிறத்தை உடையவர்களுக்கு இது குறைவாகவும் தோலின் அடிப்பகுதியிலும் இருக்கிறது. அதனாலேயே அவர்கள் வெயிலில் சென்றவுடனேயே சருமம் சீக்கிரம் சிவந்து விடுகிறது. அதிகமாகவும் அவர்கள் சருமப் பாதிப்பை அடைகிறார்கள். ஆனால் நிறம் குறைந்தவர்களுக்கு இந்த நிறத்தைத் தீர்மானிக்கும் நிறமிகள் அதிகமாக இருக்கின்றன. மேலும் தோலுக்கு மிக அருகில் இருப்பதால் சூரிய ஒளியினால் அதிக பாதிப்பை அடைவதில்லை. வெயிலினால் சருமப் பாதிப்பை அடைபவர்கள் அவ்வப்போது அழகு நிலையம் சென்று ஃபேஷியல், ப்ளீச் செய்யும்போது முகம் பளிச்சென இருக்கும்.

கோடைக்காலத்தில் சருமம் அதிகமாக வியர்க்கும். வியர்வை அதிகமாகும் பொழுது நாற்றம் எடுக்கும். இதைப் போக்க இருவேளை குளித்து உடைமாற்ற வேண்டும். இறுக்கமான ஆடை அணியக் கூடாது. மெல்லிய பருத்தி ஆடையும், இள நிறமான ஆடையும் அணிவது நல்லது.

வெயில் காலத்தில் நமது தலைமுடிக்கும், குறிப்பாக சருமத்திற்கும் பாதுகாப்பு ரொம்பவே அவசியம்.

வியர்வையினால் தலையில் அதிகமாக அரிப்பு எடுக்கும். பேன் தொல்லை அதிகமாகும்; முடி உதிரும். ஒருவித பாக்டீரியா சருமத்தை அரிக்க ஆரம்பிப்பதால் பொடுகுத் தொல்லையும் அதிகமாகும். பொடுகுத் தொல்லையைப் போக்க தற்பொழுது பொடுகு நீக்கி ஷாம்புகள் (Anti bacterial shampoo) வந்துள்ளன. அவற்றையோ அல்லது மூலிகைகள் கலந்த ஷாம்புவையோ உபயோகப்படுத்தலாம்.

சிகைக்காயிலுள்ள காரத்தன்மையினால், அதை உபயோகப்படுத்தினாலும், பொடுகுத் தொல்லை இராது. முட்டையின் வெண் கருவைத் தலையில் தேய்த்து, சிறிது நேரத்தில் அலசலாம். எதை உபயோகப்படுத்தினாலும் தலையை நீர் கொண்டு சரியாக அலசவில்லையெனில் பொடுகு அதிகரித்துவிடும்.

வால் மிளகைப் பாலில் ஊறவைத்து அரைக்கவும். தலையில் எண்ணெய் தடவி லேசாக மசாஜ் செய்தால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். தலையை ஒரு ஒரு பாகமாகப் பிரித்து அந்த இடத்தில் அரைத்த கலவையைத் தடவி பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். (லேசாக எரிச்சல் கொடுக்கும்) பின்பு தரமான சிகைக்காய்ப் பொடி, அல்லது ஷாம்பு கொண்டு தலையை அலசவும்.

சிகைக்காயை அரைக்கும் பொழுது அத்துடன் வேப்பிலை, வெள்ளை மிளகு, வசம்பு போன்றவைகளைச் சேர்த்து அரைத்தால், பொடுகுத் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம். (வசம்பிற்கு தொற்றைத் தடுக்கும் ஆற்றல் உண்டு)

கண்களுக்கு!

உடல் அதிக உஷ்ணமாவதால், கண் எரிச்சல் அதிகமாகும். வெள்ளரிக்காயை வட்டமாகத் துண்டுகள் செய்து, கண் மேலே வைத்துச் சிறிது நேரம் படுத்தால் கண்களுக்குக் குளிர்ச்சி கிடைக்கும். கண்களுக்கு அடியிலுள்ள கரு வளையமும் நீங்கும்.

சருமப் பராமரிப்பு

எண்ணெய் சருமம் உடையவர்களுக்கு தலைமுடிக்கு அருகிலேயே எண்ணெய் சுரப்பி உள்ளது. எண்ணெய் சுரப்பிகளிலிருந்து அதிகம் எண்ணெய் வெளிவரும். வியர்வைச் சுரப்பிகளிலிருந்தும் வியர்வை அதிகமாக வரும். இது குறிப்பாக டீன் ஏஜில் உள்ளவர்களை அதிகமாகப் பாதிக்கும். பருத்தொல்லை கோடைக்காலத்தில் எண்ணெய் சருமத்தில் அதிகமாகிவிடும். அவர்கள் சாதாரண சோப்பை உபயோகப்படுத்தினால் அதிலுள்ள கொழுப்பு அமிலம் (fatty acid) எண்ணெய் சருமத்தில் சேரும் பொழுது பிரச்சினையாகி விடும். அவர்கள் எண்ணெய் விலக்கப்பட்ட சோப் வகைகளைப் (Oil free soap) பயன்படுத்த வேண்டும். இதேபோல் Soap free face wash உண்டு. அதைப் பயன்படுத்தினால் ஃப்ரெஷ் ஆக உணரலாம். எண்ணெய் சருமம் உடையவர்களுக்கென்றே பிரத்யேகமாக எண்ணெய் விலக்கப்பட்ட க்ளன்சர், டோனர், மாய்சரைசர் உண்டு. அவற்றை உபயோகப்படுத்தி எண்ணெய் சருமத்தை உடையவர்கள் நல்லவிதமாகப் பாதுகாக்கலாம்.

சருமப் பாதுகாப்பிற்கான டிப்ஸ்:

வெள்ளரிக்காய், தர்பூசணி சாற்றைச் சம அளவு எடுத்துக் கொண்டு (1 டீ ஸ்பூன் சாறு) அதனுடன் ஒரு டீ ஸ்பூன் கடலை மாவு கலந்து முகத்தில் பூசி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம்.

இரண்டு டீ ஸ்பூன் இளநீருடன் தேன் கலந்து முகம், கழுத்து, கைகள் என எங்கெல்லாம் சூரியஒளி அதிகமாகப்படுகிறதோ, அந்த இடத்தில் 10 முதல் 30 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கழுவ வேண்டும். இதனால் கருமை நீங்கி சருமம் பளிச்சென்று இருக்கும்.

டீ வடிகட்டிய டிகாஷனை எடுத்துக்கொள்ளவும். (இரண்டாம் முறை உபயோகப்படுத்தியதாக இருக்கலாம். அல்லது லைட்டான டிகாஷனாக இருக்கலாம்.) முல்தானி மெட்டி பவுடர் ஒரு ஸ்பூனுடன் இரண்டு டீ ஸ்பூன் டீ டிகாஷன் கலந்து அரை மணி நேரம் ஊற வைத்துக் கழுவலாம். இந்தக் கலவையை வெயிலில் செல்வதற்கு முன்னும், சென்றுவந்த பிறகும் உபயோகிக்கலாம்.

குளிக்கும் பொழுது:

வியர்வை நாற்றம் போக, குளிக்கும்பொழுது வெதுவெதுப்பான நீரில் சிறிது வேப்பிலையைப் போடவும். அதன் சாறு இறங்கிய பிறகு அதை எடுத்துவிட்டுக் குளிக்கும் நீரில் கலந்து குளிக்கலாம்.

ஒரு வாளி தண்­ணீரில் 2 சிட்டிகை கற்பூரத்தூளைப் போட்டுக் குளித்தால் வியர்வை நாற்றம் அகலும்.

முகத்திற்கு கோடைக்காலத்திற்கென்று பிரத்யேகமாக பழவகை ஃபேஷியல் செய்வது நல்லது. ஆப்பிள், வாழைப்பழம், தர்பூசணி, தக்காளி, வெள்ளரிக்காய், இளநீர் இவைகளைக் கொண்டு முகத்திற்குப் பூசலாம். (சைனஸ் தொந்தரவு உள்ளவர்களைத் தவிர அனைவரும் இந்த முறையைப் பின்பற்றலாம்).

கோடைக்காலங்களில் வெளியில் அலைய நேரிடும்பொழுது இளநீர், ஆரஞ்சு, எலுமிச்சைப் பழ ஜூஸ் அருந்துவது நல்லது. சன் ஸ்ட்ரோக் (Sun Stroke) வராமல் தடுக்க ஒரு வெங்காயத்தைக் கையிலோ, உடலிலோ வைத்திருந்தால் சன் ஸ்ட்ரோக்கிலிருந்து தப்பிக்கலாம்.

– அழகுக்கலை நிபுணர் வசுந்தரா