பஞ்சாப் மாநிலம் மோகா நகரத்தைச் சேர்ந்தவர் ரித்திகா ஜிண்டல் (22). சிறுவயதிலிருந்தே படிப்பில் படு சுட்டியான ரித்திகா சிபிஎஸ்இ வாரியம் நடத்தும் 12-ம்வகுப்பு தேர்வில் வட இந்திய அளவில் முதலிடம் பிடித்தார். இதனையடுத்து டெல்லி ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில்பட்டப்படிப்பு மேற்கொண்டார். கல்லூரியில் மூன்றாம் ஆண்டுபடிக்கும்போதே குடிமைப்பணிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வுக்கு சுயமாகத் தயாரானார். பயிற்சி மையத்துக்கு செல்லாமலே கடினமாக உழைத்து யுபிஎஸ்சி தேர்வை எதிர்கொள்ள ஆயத்தமானார்.
இதற்கிடையில் எதிர்பாராத விதமாக அவரது தந்தைக்கு சுவாசக்குழாய் மற்றும் நுரையீரலில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தந்தையைப் பராமரித்துக் கொண்டே குடிமைப்பணி தேர்வுக்கும் படித்து வந்தார். முதல் முயற்சியில் வெற்றி கை நழுவிப்போனது. 2019-ல் இரண்டாம் முயற்சியில் யுபிஎஸ்சி தேர்வில் வாகை சூடினார். தனது 22-ம் வயதில் தேசிய அளவில் 88-வது இடத்தை பிடித்து இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் பட்டியலில் வெற்றிகரமாக இடம்பிடித்தார். ஆனால், ஐஏஎஸ் பயிற்சி காலத்தில் உடல் நலிவடைந்த தனது தாய்-தந்தை இருவரையும் பறிகொடுத்தார். தற்போது இமாச்சல பிரதேசம் பங்கி பகுதியில் பிராந்திய ஆணையராக பணிபுரிந்துவருகிறார்.
யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி அடைந்தது குறித்து ரித்திகா ஜிண்டல் கூறியதாவது:-
எனது தந்தை புற்றுநோயை எதிர்த்து உயிர் வாழ நடத்திய போராட்டத்தை யுபிஎஸ்சி தேர்வுக்கான தயாரிப்பு நாட்களில் நான் கண்கூடாகப் பார்க்க நேர்ந்தது. அதுவே ஒருவிதத்தில், வலிமையுடன் கடின உழைப்பை செலுத்தித் தேர்வுக்குத் தயாராக என்னை உந்தித்தள்ளியது. இவ்வாறு அவர் கூறினார்.