இந்திய தடுப்பூசி போட்டேன்; தெம்பாக இருக்கிறேன்: போரிஸ் ஜான்சன்

இந்தியா வந்துள்ள போரிஸ் ஜான்சன், தான் இந்தியாவின் கோவிட் தடுப்பூசியை செலுத்திக் கொண்டதாகவும், அது நல்ல பலனை தந்துள்ளதாகவும் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்திய பிரதமர் மோடியை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை ஒரு வரலாற்று நிகழ்வு. கடந்த சில ஆண்டுகளாக இந்தியா – பிரிட்டன் இடையேயான உறவுகள் வலுபெற்றுள்ளது. இந்த நேரத்தில் போரிஸ் ஜான்சன் இங்கு வந்திருப்பது மேலும் வலுப்படுத்தும். இந்தியாவில் தனது சுற்றுப்பயணத்தை மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்துவதன் மூலம் துவங்கினார். இந்தியாவை பற்றி நன்கு அறிவிந்தவர் போரிஸ். பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு கிடைக்கும் உத்துழைப்பை வரவேற்கிறோம். வர்த்தக ரீதியான ஒப்பந்தங்களில் இரு தரப்புக்கும் இடையே நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பிரிட்டன் நிறுவனங்கள் இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்வதை வரவேற்கிறோம். கிளாஸ்கோவில் நடந்த சுற்றுச்சூழல் மாநாட்டின் இலக்குகளை அடைய இந்தியா முயற்சி செய்துவருகிறது. நாங்கள் பிரிட்டனை இந்தியாவின் ஹைட்ரஜன் மிஷனில் இணைவதற்கு பிரிட்டனுக்கு அழைப்பு விடுக்கிறோம். பாதுகாப்புத் துறை, வர்த்தகம், காலநிலை மற்றும் எரிசக்தி தொடர்பாக பேச்சு நடத்தினோம். உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது. உக்ரைனில் உடனடிப் போர்நிறுத்தம் மற்றும் பிரச்சனைக்குத் தீர்வுகாண பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்தை நாங்கள் வலியுறுத்தினோம். இவ்வாறு அவர் கூறினார்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது:

இன்று அருமையான பேச்சுவார்த்தைகள் மூலம் இருநாட்டு உறவுகளை அனைத்து வகையிலும் வலுப்படுத்தியுள்ளோம். இந்த வருகை எங்கள் உறவை ஆழப்படுத்தியுள்ளது. நான் இந்தியாவின் கோவிட் தடுப்பூசியை செலுத்திக் கொண்டேன். எனக்கு நல்ல பலனை தந்துள்ளது. அதற்காக இந்தியாவுக்கு மிக்க நன்றி. போர் விமானங்கள் தயாரிப்பு தொழில்நுட்பம் இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளப்படும். எரிசக்தி பாதுகாப்பில் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

குஜராத் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, டெல்லி வந்த போரிஸ் ஜான்சனுக்கு இன்று காலை குடியரசு தலைவர் மாளிகையில் பாரம்பரிய முறைபடி வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு நடைபெற்ற முப்படையினர் அணிவகுப்பு மரியாதை அவர் ஏற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, போரிஸ் ஜான்சனுடன் கைகுலுக்கி வரவேற்றார்.

அப்போது பேசிய போரிஸ் ஜான்சன், இந்தியா அளித்த அருமையான வரவேற்புற்கு நன்றி என்றும், இதற்கு முன்பை விட தற்போது இரு நாடுகள் இடையேயான உறவு வலுவாகவும், சிறப்பாகவும் உள்ளது என்றும் கூறினார். முன்னதாக டெல்லி ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்ற ஜான்சன், மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கிருந்து புத்தகத்தில் இது குறித்து எழுதி அவர் கையெழுத்திட்டார்.‘