மக்கள் மீது அக்கறை இல்லாமல் சொத்து வரியை உயர்த்தி உள்ளனர்: ஜி.கே.வாசன்

தமிழக அரசின் இயலாமையின் காரணமாக சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக ஜி.கே.வாசன் கூறினார்.

தமிழக அரசு உயர்த்தியுள்ள சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஜி.கே வாசன் பேசியதாவது:-

தமிழக அரசு உயர்த்தி உள்ள சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னையில் போராட்டம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று நாகர்கோவிலில் போராட்டம் நடக்கிறது. ஈரோடு, கடலூர் போன்ற அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்தப்படும். சொத்து வரி உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை எளிய மக்களைப் பற்றி கவலைப்படாமல் கண்மூடித்தனமாக சொத்து வரி உயர்வை அரசு உயர்த்தி உள்ளது. தமிழக அரசு மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால் சொத்து வரியை உயர்த்தி இருக்க மாட்டார்கள். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறக்க விட்டுள்ளனர். மக்களை ஏமாற்றும் அரசாக தமிழக அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. தமிழக அரசின் இயலாமையின் காரணமாக சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்பட்டால் உடனே மத்திய அரசை குறை கூறுகிறார்கள். வாக்களித்த மக்களுக்கு தமிழக அரசு துரோகம் செய்துவிட்டது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. பெண்கள் நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் தனியாக நடந்து செல்ல முடியவில்லை. பெண்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். கொலை, கொள்ளை, நகை பறிப்பு, பாலியல் தொந்தரவுகள் அதிகரித்து வருவது வேதனைக்குரியதாகும். மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் அரசாக தமிழக அரசு செயல்பட வேண்டும்.

இந்தியாவை வல்லரசாக மாற்ற முயற்சி மேற்கொண்டு வரும் மத்திய அரசை குறை கூறுவது நியாயம் கிடையாது. மீண்டும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வளமான தமிழகத்தை ஏற்படுத்துவது நமது கடமையாகும். பெருந்தலைவர் காமராஜர் மக்கள் தலைவர் ஜி.கே. மூப்பனார் நல்லாசியுடன் நாட்டை நல்வழிக்கு கொண்டு செல்வோம்.

ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது பெண்களுக்கு தமிழகத்தில் அதிக திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. அதிக திட்டங்களை தீட்டிய அரசு ஜெயலலிதா அரசு தான். ஆனால் பெண்களுக்கான திட்டங்களை முடக்கிய அரசு தி.மு.க. அரசு என்பதை மக்கள் மறந்துவிடக்கூடாது. பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி வைத்துள்ளது. மக்கள் விரோத அரசாக தி.மு.க. அரசு மாறி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.