இனி ஆண்டுதோறும் நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி தினமாக மீண்டும் கொண்டாடப்படும். மீண்டும் ‘உத்தமர் காந்தி விருது’, ஆண்டுக்கு 6 கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிடுகிறார். அவை பின்வருமாறு;
இனி ஆண்டுதோறும் நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி தினமாக மீண்டும் கொண்டாடப்படும். அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட உள்ளாட்சி தினம் இந்த ஆண்டு முதல் மீண்டும் கொண்டாடப்படும். உள்ளாட்சி அமைப்பின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். உள்ளாட்சி என்பது மக்களாட்சியின் ஆணி வேர். திமுக ஆட்சி அமையும்போதெல்லாம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 6 கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மார்ச் 22 உலக தண்ணீர் தினம், நவம்பர் 1 உள்ளாட்சிகள் தினம் அன்றும் கிராம சபை கூட்டம் நடைபெறும். ஜனவரி 26 குடியரசு தினம், மே 1 உழைப்பாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியன்று கிராம சபை கூட்டம் நடைபெறும். மக்களின் பங்களிப்பை அதிகரிக்க கிராம சபைக் கூட்டங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது.
உள்ளாட்சி மன்ற கூட்டங்களில் பங்கேற்கும் உறுப்பினர்களுக்கு அமர்வுப்படி உயர்த்தப்படுவதாக பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கலைஞர் ஆட்சியில் தான் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அமர்வுப்படி வழங்கப்பட்டது. மாவட்ட ஊராட்சி கூட்டங்களில் பங்கேற்கும் உறுப்பினர்களுக்கு அமர்வுப்படி 10 மடங்கு உயர்த்தப்படுகிறது. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அமர்வுப்படி 5 மடங்கு உயர்த்தப்படும். அரசின் அறிவிப்பால் 1.10 லட்சம் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பயனடைவர் என்று குறிப்பிட்டார்.
‘உத்தமர் காந்தி கிராம ஊராட்சி விருது’ இந்த ஆண்டு முதல் மீண்டும் வழங்கப்படும். ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் 37 கிராம ஊராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தலா 10 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும். அனைத்து ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்களுக்கு வாகனம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஊராட்சி தலைவருக்கான அறை, கூட்ட அரங்கம், செயலருக்கான அறை உள்ளிட்டவற்றுடன் கிராம செயலகம் கட்டப்படும். இந்த ஆண்டு 600 புதிய கிராம செயலக கட்டிடங்கள் கட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.