தமிழகத்தில், கொரோனா பரவல் அதிகரித்து வருவது தொடர்பாக, முதல்வர் ஆலோசனை!

தமிழகத்தில், கொரோனா பரவல் அதிகரித்து வருவது தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில், கடந்த ஜனவரி மாத இறுதியில், கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் குறையத் தொடங்கியது. இந்த மூன்றாவது அலைக்கு முக்கிய காரணம், தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய ஒமைக்ரான் தொற்று. கொரோனா பரவல் குறையத் தொடங்கியதை அடுத்து, ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டன.

இந்நிலையில், தமிழகம், தலைநகர் டெல்லி உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வருகிறது. மேலும், ஒமைக்ரான் தொற்றின் திரிபான எக்ஸ்.இ வகை கொரோனா தொற்றும் இந்தியாவில் பரவி வருவதால், பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நாடு முழுதும் கொரோனா பரவல் உயர்ந்து வருவதை அடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் முடுக்கி விட்டுள்ளன.

இந்நிலையில் இன்று, செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், தமிழகம் முழுவதும் முகக் கவசம் அணிவது மீண்டும் கட்டாயம் ஆக்கப்படுவதாகவும், முகக் கவசம் அணியாத நபர்களிடம் இருந்து, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அதிகரித்து வரும் கொரோனா தொற்று குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளிடம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விரைவில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.