வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தென் அமெரிக்கா நாடான பராகுவேயில் பயணம் மேற்கொண்டார். பராகுவேயில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை மந்திரி ஜெய்சங்கர் திறந்து வைத்தார்.
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் பிரேசில், பராகுவே மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டார். இதற்கிடையே, மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் தென் அமெரிக்கா நாடான பராகுவே சென்றடைந்தார். இந்நிலையில், பராகுவேயில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை மத்திய மந்திரி ஜெய்சங்கர் திறந்து வைத்தார். தலைநகர் அசன்சியன் நகரின் முக்கிய நீர்முனையில் சிலையை அமைத்துள்ள அசன்சியன் நகராட்சியின் முடிவை பாராட்டினார். மேலும், பராகுவேயில் புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்திய தூதரகத்தின் வளாகத்தையும் அவர் திறந்து வைக்க உள்ளார். அங்கு சுமார் இரு நூற்றாண்டுக்கு முன் பராகுவேயின் சுதந்திரப் போராட்ட இயக்கம் தொடங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க காசா டி லா இன்டிபென்டென்சியா பகுதியை அவர் பார்வையிட்டார்.
முன்னதாக பிரேசில் நாட்டின் சாவ் பாலோ நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெய்சங்கர் பேசியதாவது:-
இந்தியா – பிரேசில் இடையே சிறந்த நட்புறவு நிலவி வருகிறது. ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவுக்கு சிறந்த இணைப்புப் பாலமாக திகழும் இந்திய வம்சாவளியினருக்கு நன்றி. உறவு ஒரு வழிப்பாதையாக இருக்க முடியாது, அதைத் தக்க வைக்க பரஸ்பர மரியாதை இருக்க வேண்டும். சீனா அண்டை நாடு, ஒவ்வொருவரும் தங்கள் அண்டை நாடுகளுடன் நல்ல உறவை விரும்புகிறார்கள். இந்தியாவுடனான எல்லை ஒப்பந்தங்களை சீனா புறக்கணித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மிகவும் கடினமான கட்டத்தில் உள்ளன. கல்வான் பள்ளத்தாக்கு மோதல் இரு நாடுகளுடனான உறவில் கறை படிந்த நிழல் போல் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.