இலங்கையில் இடைக்கால அரசு அமைந்தாலும் பிரதமர் பதவியில் இருந்து விலக மாட்டேன் என்று இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவித்து வரும் மக்கள், தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதிபர் கோந்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள், எதிர்கட்சியினர் வலியுறுத்தி வருகிறார்கள். மேலும் இடைக்கால அரசு அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் அதிபர் பதவியில் இருந்து விலக மாட்டேன் என்று கோத்தபய ராஜபக்சே அறிவித்துவிட்டார். பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவியில் இருந்து விலகலாம் என்று சில நாட்களாகவே தகவல் வெளியானபடி இருந்தது.
இந்த நிலையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்று மகிந்த ராஜபக்சே அறிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சே கூறியதாவது:
மாறுபட்ட கொள்கைகளை கொண்டவர்கள் நேருக்கு நேராக பார்த்து கொள்ள முடியாதபோது இது போன்ற அரசியல் அமைப்புகளால் (இடைக்கால அரசாங்கம்) எந்த பயனும் இல்லை ஒவ்வொருவருடைய கொள்கைகளும் இணக்கப்பாடுகளுக்கும் ஒன்றாக இல்லாத போது எப்படி இடைக்கால அரசாங்கத்தை அமைக்க முடியும்.
முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே அல்லது வேறு அமைச்சர்களை கொண்டு இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படுவதற்கு மற்றவர்கள் விரும்புவார்கள் என நான் நம்பவில்லை. நான் பதவி விலக வேண்டும் என்ற கருத்தை பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதிபலிக்க வில்லை. வரலாறு பற்றிய தெளிவில்லாத சிலர் அப்படி கூறலாம். கட்சி யிலும், அரசியல் தொடர் பிலும் என்னிடம் யாரும் அது போன்ற கருத்தை முன்வைக்கவில்லை. நான் பிரதமர் பதவியில் இருந்து விலகமாட்டேன்.
ஒரு வேளை இடைக்கால அரசாங்கம் அமைந்தாலும் நானே தலைவராக இருப்பேன். நாட்டில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் தீர்வு காண பேச்சுவார்த்தைக்கு அவர்கள் வரவில்லை. போராட்டக்காரர்கள் பேச்சுவார்த்தைக்கு வராதவரை போராட்டங்கள் தொடரவே செய்யும். அவர்கள் தொடர்ந்து போராடி கொண்டிருக்க வேண்டியது தான். பேச்சுவார்த்தைக்கு எந்த சந்தர்ப்பத்திலும் அரசின் கதவு திறந்திருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.