உக்ரைனின் சாப்ளின் நகர் ரயில் நிலையத்தில் ரஷ்ய ராணுவம் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதில் 22 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் அந்நாட்டு அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் 4 ரயில் பெட்டிகள் முழுவதுமாக தீப்பற்றி எரிந்துள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவத்தினரின் தாக்குதல் துவங்கி 6 மாதங்களாகின்றன. வலிமை வாய்ந்த ரஷ்ய ராணுவத்தினரின் தாக்குதலை எதிர்கொண்டு, உக்ரைன் ராணுவமும் கடுமையாக போராடி வருகிறது. ஒரு மாதத்தில் இந்த போர் முடிவுக்கு வரும் என்று ரஷ்யா எதிர்பார்த்திருந்த நிலையில் உக்ரைனின் பதில் தாக்குதல், ரஷ்ய ராணுவ அதிகாரிகளுக்கு கடும் மனச்சோர்வை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் போர் துவங்கி 6 மாதங்கள் நிறைவடைந்ததை பொறுத்துக் கொள்ள முடியாத ரஷ்யா, நேற்று அதிகாலை உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள சாப்ளின் நகரின் ரயில் நிலையத்தின் மீது, சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ரயில் நிலையத்தில் இருந்த அப்பாவி பொதுமக்கள் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய, உக்ரைனின் அதிபர் செலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், ‘சர்வதேச போர் விதிமுறைகளை மீறி, குடியிருப்பு பகுதிகளில் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடநத்தி வருகிறது. ரயில் நிலையத்தில் ரஷ்யா ஏவுகணைகளை வீசியதில் அருகில் இருந்த ஒரு வீடும் தரை மட்டமாகி விட்டது. ஒரு வாகனத்தில் இருந்த 5 பேர் எரிந்து, உடல் கருகி இறந்து விட்டனர். மேலும் 11 வயது சிறுவன் ஒருவனும் இந்த தாக்குதலில் பலியாகி உள்ளான். ரயில் ஒன்றில் 4 பெட்டிகள் முழுமையாக தீப்பிடித்து எரிந்துள்ளன. பலியானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம்’ என்று குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதத்திலும் இதே போல் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தில் ரயில் நிலையத்தில் இருந்த 50க்கும் மேற்பட்ட பயணிகள் பலியானார்கள். தற்போது உக்ரைனில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. வழக்கத்தை விட அதிக உற்சாகத்துடனும், எழுச்சியுடனும் இந்த சுதந்திர நாளை கொண்டாட வேண்டும் என்று மக்களுக்கு, அதிபர் செலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும் அதே வேளையில் இந்த சுதந்திர தின கொண்டாட்டத்தை நிலை குலையச் செய்யும் வகையில் ரஷ்யா பெரிய அளவில் தாக்குதல் நிகழ்த்தும் என்ற அச்சமும், எதிர்பார்ப்பும் பொதுமக்களிடம் உள்ளது.
தற்போதைய இந்த தாக்குதல் மக்களின் அச்சத்தை மேலும் அதிகரிக்க செய்துள்ளது. ரயில் நிலையத்தில் அப்பாவி பொதுமக்கள் மீது நடந்த இந்த தாக்குதல் குறித்து, ரஷ்ய ராணுவ அதிகாரிகள் ஏதும் தெரிவிக்கவில்லை.