ஜம்மு-காஷ்மீர் பகுதியில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு-காஷ்மீர் உரி பகுதியில் ஊருடுவ முயன்ற பயங்கரவாதிகள் 3 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா அருகே உரியின் கமல்கோட் செக்டரில் உள்ள மடியன் நானக் போஸ்ட் அருகே பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். இந்திய பாதுகாப்புப்படை மற்றும் காவல்துறையினரால் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். காஷ்மீர் மண்டல போலீஸ் இந்த தகவலை உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் பயங்கர தாக்குதல் நடத்த பாகிஸ்தான் உளவு அமைப்பு அனுப்பி வைத்த தீவிரவாதியை நமது ராணுவத்தினர் சுட்டுப் பிடித்துள்ளனர். இதில் அவர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.

தீவிரவாதிகள் மூலம் இந்தியாவுக்கு அதிக குடைச்சலை பாகிஸ்தான் தந்துக் கொண்டிருந்தது. இதன் உச்சக்கட்டமாக, கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காஷ்மீருக்குள் ஊடுருவிய தீவிரவாதிகள் உரி ராணுவத் தளத்தில் பயங்கர தாக்குதலை நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த இந்தியா, உரி தாக்குதல் நடந்த 10 நாட்களுக்கு பிறகு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து அங்கு செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்கள் மீது துல்லியத் தாக்குதலை நடத்தியது. இதில் 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கையை சற்றும் எதிர்பார்க்காத பாகிஸ்தான், அது முதலாக இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை அனுப்புவதை பெருமளவில் குறைத்துக் கொண்டது.

இந்த சூழலில், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியது பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்களுக்கு ஒருவித புத்துணர்ச்சியை அளித்ததாக கூறப்படுகிறது. தலிபான்களால் ஆப்கானிஸ்தானை கைப்பற்ற முடிந்தபோது, தொடர் தீவிரவாத நடவடிக்கையால் காஷ்மீரையும் நம்மால் கைப்பற்ற முடியும் என தீவிரவாதிகள் நம்புவதாக இந்திய உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அந்த வகையில், கடந்த ஓராண்டாக இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்யும் நடவடிக்கையில் பாகிஸ்தான் ராணுவமும், அதன் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யும் ஈடுபட்டு வருகின்றன. எனினும், தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகளை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்து வருகிறது.

அந்த வகையில், கடந்த 22-ம் தேதி இரவு காஷ்மீரின் ரஜோரி எல்லையில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதை இந்திய ராணுவ வீரர்கள் கண்டறிந்தனர். அப்போது எல்லையில் வைக்கப்பட்டிருந்த வேலியை வெட்டி உள்ளே நுழைந்த தீவிரவாதிகள் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இரண்டு தீவிரவாதிகள் தப்பியோடிய நிலையில், ஒரு தீவிரவாதி மட்டும் குண்டுக் காயங்களுடன் பிடிபட்டார். அதன் பின்னர் அந்த தீவிரவாதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து நேற்று அவர் கண் விழித்ததாக தெரிகிறது.

அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கோட்லி மாவட்டத்தைச் சேர்ந்த டபாரக் உசேன் (32), லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யில் பணிபுரியும் யூனஸ் செளத்ரி என்ற அதிகாரிதான் தனக்கு பயிற்சி அளித்து, இந்தியாவில் தாக்குதல் நடத்த அனுப்பி வைத்ததையும் அவர் ஒப்புக்கொண்டார். அதுமட்டுமின்றி, இந்த தாக்குதலை மேற்கொள்வதற்காக 3 தீவிரவாதிகளுக்கு தலா ரூ.30 ஆயிரம் கொடுத்தாகவும் டபாரக் உசேன் வாக்குமூலம் அளித்தார். இதேபோல, நூற்றுக்கணக்கான தீவிரவாதிகளை இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்காக ஐஎஸ்ஐ பயிற்சி அளித்து வருவதாகவும் அவர் கூறினார். இதையடுத்து, தீவிரவாதி டபாரக் உசேனை கைது செய்த ராணுவத்தினர், அவரிடம் இருந்து இயந்திர துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் ஆகிய ஆயுதங்களையும் ராணுவத்தினர் கைப்பற்றினர்.