கள்ளக்குறிச்சி மாணவியின் தாய் முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு!

உயிரிழந்த கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் தாய் செல்வி சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை இன்று சந்தித்துப் பேசினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி கடந்த ஜூலை 13ஆம் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவி தற்கொலை செய்துகொண்டார் என பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஜூலை 17ஆம் தேதி பள்ளிக்கூட வளாகத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் பள்ளி மீது தாக்குதல் நடத்தியதுடன், வாகனங்களை தீக்கிரையாக்கினர். இந்த விவகாரத்தில் பள்ளி தாளாளர், இரண்டு ஆசிரியர்கள் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு பின்னர் சிபிசிஐடி போலீஸுக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் முதல் கட்டமாக பிரேத பரிசோதனை கடந்த மாதம் 14-ஆம் தேதி செய்யப்பட்டது. இந்த பிரேத பரிசோதனையில் தங்களுக்கு திருப்தி இல்லை எனவும், மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் மாணவியின் பெற்றோர் சென்னை வழக்கு தொடர்ந்தனர். அதன்படி மாணவியின் உடல் 2 முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கையை ஜிப்மர் மருத்துவகுழு நீதிபதியிடம் தாக்கல் செய்துள்ளது. இதற்கிடையே, சென்னை உயர்நீதிமன்றம் பள்ளி நிர்வாகிகள் உட்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த வழக்கில் முடிவு தெரியும் வரை அவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்துவந்த நிலையில் நீதிமன்றம், பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில் தனது மகளின் மரணம் வழக்கு விசாரணை திசை திருப்ப முயற்சிகள் நடக்கிறது என்றும், விசாரணை வெளிப்படையாக இல்லை என்றும், பள்ளி நிர்வாகம் தடயங்களை அழித்துள்ளது எனவும் மாணவியின் பெற்றோர் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை கூறினர். மேலும், தங்கள் மகளின் மரணத்திற்கு தமிழக முதலமைச்சர் தான் நீதி வழங்க வேண்டும் என்றும், எனவே முதல்வரை நேரில் சந்திக்கப் போகிறோம் எனவும் கூறி வந்தனர். இந்நிலையில், சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாணவியின் தாயாரை அவரது வீட்டுக்கே சென்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, மாணவியின் தாயாரிடம் அலைபேசி வாயிலாகப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தவறு செய்தது யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம். உங்களுக்கு உகந்த நேரத்தில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னைச் சந்திக்கலாம். தைரியமாக இருங்கள் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாணவியின் தாய் செல்வி மற்றும் மாணவியின் தந்தை உள்ளிட்டோர் இன்று தமிழக முதலமைச்சர் மு.கஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்து சந்தித்தனர். ஏற்கனவே முதலமைச்சர் தொலைபேசியில் மாணவியின் தாயிடம், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சந்திக்க வரலாம் எனக் கூறியிருந்த நிலையில்தான் முதல்வரை மாணவியின் பெற்றோர், தம்பி ஆகியோர் நேரில் சந்தித்துள்ளனர். முதல்வரைப் பார்த்ததும், மாணவியின் தாயார் செல்வி, பேசக்கூட முடியாமல் தேம்பித் தேம்பி அழுதுள்ளார். அவருக்கு ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின், உறுதியாக நீதி கிடைக்கும், குற்றவாளிகள் தப்ப முடியாது எனத் தெரிவித்துள்ளார். பின்னர் வெளியே வந்த செல்வி, தேம்பித் தேம்பி அழுதுகொண்டே இருந்தார். இந்தக் காட்சி அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாணவியின் தாய் செல்வி, “குற்றவாளிகளை தப்பிக்கவிடாமல் விசாரணையை விரைவாக நடத்தி குறுகிய காலத்தில் நீதி கிடைக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். குற்றவாளிகளை தப்ப விட மாட்டோம். குற்றம் செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார். முதலமைச்சரை முழுமையாக நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.