என் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை பாஜகவுக்கு எதிரான போராடுவேன்: ஹேமந்த் சோரன்

என் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை பாஜகவுக்கு எதிரான போராடுவேன் என்று, முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கூறினார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது அரசியல் பரபரப்புகள் நிலவிவரும் நிலையில், அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தனது கட்சி எம்எல்ஏக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளார். தற்போது இவ்வாறு சென்ற எம்எல்ஏக்கள் ஹயாக படகு சவாரி செய்து வருகின்றனர். இது சம்பந்தமான படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் ஹேமந்த் சோரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் அம்மாநில ஆளுநருக்கு சமீபத்தில் பரிந்துரைத்திருந்தது. இந்நிலையில் காங்கிரஸ்-ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அமைப்பின் எம்எல்ஏக்களை சோரன் தனி சொகுசு விடுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

ஹேமந்த் சோரன் முதலமைச்சராக இருந்தபோது கடந்த 2021ல் தனது பெயரில் சுரங்க ஒதுக்கீடு பெற்றார். அவர் தனது பதவியை பயன்படுத்தி சட்டவிரோதமாக சுரங்க உரிமத்தை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-க்கு எதிராக முதல்வர் ஹேமந்த் சோரன் செயல்பட்டிருப்பதாக கூறி தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்தது. இது தொடர்பான விசாரணையில் ஹேமந்த் சோரன் சுரங்க ஒதுக்கீடு பெற்றது உறுதியானது. இதில் ரூ.100 கோடி மோசடி நடைபெற்றுள்ளதாக கூறப்பட்டது. இந்த குற்றச்சாட்டையடுத்து சோரன் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திடம் அம்மாநில ஆளுநர் கருத்து கேட்டிருந்தார். தேர்தல் ஆணையமும், சோரன் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தது. இதனையடுத்து ஹேமந்த் சோரனின் எம்எல்ஏ பதவி எப்போது வேண்டுமானாலும் பறிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இது மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக சோரன் தனது இல்லத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டத்தை நடத்தினார். இதில் அனைத்து எம்எல்ஏக்களும் பங்கேற்ற நிலையில், தற்போது இவர்கள் அனைவரையும் பேருந்தில் சொகுசு விடுதிகளுக்கு அழைத்து சென்றுள்ளார். சமீப காலங்களாக எம்எல்ஏக்கள் ஒரு கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற பின்னர் மற்றொரு கட்சிக்கு சென்றுவிடுவது என்பது பல மாநிலங்களில் அடுத்தடுத்து நடந்துவரும் நிலையில் தற்போது ஜார்க்கண்டிலும் இவ்வாறான நடவடிக்கையை தடுக்க சோரன் எம்எல்ஏக்களை சொகுசு விடுதிக்கு மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் எம்எல்ஏக்கள் தற்போது மாநில தலைநகர் ராஞ்சிக்கு 30 கி.மீ தொலைவில் உள்ள குந்தி என்ற இடத்திற்கு அருகே உள்ள லத்ரட்டு அணைக்கு அருகில் உள்ள ஏரியில் படகு சவாரி செய்து வருகின்றனர். இவர்கள் இன்று இரவுக்குள் மீண்டும் சொகுசு விடுதிக்கு திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 43 எம்எல்ஏக்கள் ஒரே இடத்தில் உள்ளனர். தற்போதைய சூழல் மேலும் மேசாமடைந்து சோரன் தேர்தலில் போட்டியிடாத நிலை ஏற்பட்டால் அவரது மனைவி அல்லது அவரது தாயை முதலமைச்சராக மாற்ற சோரன் யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ.231 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வர் ஹேமந்த் சோரன் தொடங்கிவைத்தார். இதனைத்தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் ஹேமந்த் சோரன் பேசியதாவது:-

அரசியல் ரீதியாக எங்களுடன் போட்டியிட முடியாமல், எதிரிகள் அரசியலமைப்பு நிறுவனங்களை தவறாக பயன்படுத்துகின்றனர். அமலாக்கத்துறை, லோக்பால் மற்றும் வருமான வரித்துறையை பயன்படுத்தி ஜார்க்கண்ட் அரசை சீர்குலைக்கிறார்கள். ஆனால் அதைப்பற்றி கவலை இல்லை. ஏனென்றால் இந்தப் பொறுப்பு எனக்கு மக்களால் வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் அதிகாரப் பசியில் இல்லை. மக்கள் நலனுக்காக மட்டுமே அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் பணியாற்றுகிறோம். இங்கே முதியவரோ அல்லது தனித்து வாழும் பெண்களுக்கோ ஓய்வூதியம் கிடைக்கும் என்று யாராவது நினைத்ததுண்டா? அவை மண்ணின் மகனால் சாத்தியமானது.

ஜார்க்கண்ட் ஏழை மாநிலமாக இருப்பதால், மாநில மக்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கு அதிக நிதியை அனுமதிக்குமாறு எனது அரசாங்கம் மத்திய அரசை வலியுறுத்தியது. ஆனால் அவர்கள் அனுமதி வழங்கவில்லை. உலக பழங்குடியினர் தினமான ஆகஸ்ட் 9 அன்று, நாட்டின் பிரதமரும் பழங்குடியின ஜனாதிபதியும் நாட்டின் பழங்குடி சமூகத்திற்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பது கூட பொருத்தமானதாகக் கருதவில்லை. அவர்களின் பார்வையில் நாங்கள் பழங்குடியினர் அல்ல, ‘வனவாசிகள்’. என் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை பாஜகவுக்கு எதிரான போராடுவேன். இவ்வாறு அவர் பேசினார்.