இந்தியாவில் 23.87 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்!

கடந்த ஜூலை மாதம் மட்டும், 23.87 லட்சம், ‘வாட்ஸ் ஆப்’ கணக்குகள் முடக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘வாட்ஸ் ஆப், பேஸ்புக்’ உள்ளிட்ட சமூக ஊட கங்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு சட்டதிட்டங்களை வகுத்தது. நாட்டின் இறையாண்மை மற்றும் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கணக்குகளை முடக்கவும் அறிவுறுத்தியது. இது தொடர்பாக குறைதீர்ப்பு குழுவை உருவாக்கி, அதில் பதிவு செய்யப்படும் புகார்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாதம்தோறும் அறிக்கை தாக்கல் செய்யவும் மத்திய அரசு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், ஒவ்வொரு மாதமும் சமூக ஊடக நிறுவனங்கள் அறிக்கையை தாக்கல் செய்து வருகின்றன.

‘வாட்ஸ் ஆப்’ தகவல் தொடர்பு செயலி நிறுவனம் தாக்கல் செய்த அறிக்கையில், குறைதீர்ப்பு குழுவில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் மட்டும் இந்தியாவில் 22 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கப்பட்டன. ஜூலையில் 23.87 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டன. இதில், புகார் அளிக்கப்படுவதற்கு முன்னதாகவே 14 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.