நாட்டின் பல பகுதிகளில் கிறிஸ்தவ சமூகத்தினா், அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எழுந்த புகாா் குறித்து உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிடம் விவரங்களைக் கோர மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக கிறிஸ்தவ சமூக அமைப்புகளைச் சோ்ந்த பீட்டா் மச்சாடோ, விஜயேஷ் லால் உள்ளிட்டோா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஹிமா கோலி ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிடுகையில், ‘‘கிறிஸ்தவ சமூகத்தினா் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகப் பொதுநல மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள வழக்குகளில் பெரும்பாலானவை போலியானவை என விசாரணையில் தெரியவந்துள்ளது. இணைய ஊடகங்களில் வெளியான சில கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, நீதிமன்றம் இதை விசாரணைக்கு ஏற்கக் கூடாது’’ என்றாா்.
அதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், ‘‘தனிநபா் மீது நடத்தப்படும் தாக்குதல்களை, சமூகத்தினா் மீதான தாக்குதல்களாகக் கருதக் கூடாது. எனினும், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு ஏதேனும் சம்பவங்கள் நிகழ்ந்தனவா என்பதை உறுதிசெய்ய நீதிமன்றம் விரும்புகிறது. இதுபோன்ற தாக்குதல்களைக் கண்காணிப்பதற்கான அதிகாரிகளை மாநிலங்கள் நியமிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிா என்பதை ஆராய வேண்டியுள்ளது. எனவே, தாக்குதல் சம்பவங்கள் குறித்து உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியாணா, கா்நாடகம், ஒடிஸா, சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட் உள்ளிட்ட மாநில அரசுகளிடமிருந்து மத்திய உள்துறை அமைச்சகம் இரு மாதங்களுக்குள் விவரங்களைப் பெற்று நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும்’’ என்றனா்.