கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை எதிா்த்து ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், ‘சென்னையில் கடந்த ஜூலை 11-இல் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது. அதிமுகவில் கடந்த ஜூன் 23-ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும்’ என்று ஆகஸ்ட் 17-ஆம் தேதி தீா்ப்பளித்தாா்.
தனி நீதிபதியின் தீா்ப்பை எதிா்த்து எடப்பாடி பழனிசாமி சாா்பில் சென்னை உய்ரநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனிடையே, எடப்பாடி கே.பழனிசாமியின் மேல்முறையீட்டு வழக்கில் கேவியட் மனுவை ஓ.பன்னீா்செல்வம் தாக்கல் செய்தாா். அதில், ‘மேல்முறையீட்டு வழக்கில் தனது தரப்பு வாதத்தைக் கேட்ட பிறகே எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும்’ என கோரியிருந்தாா். இந்த மேல்முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தா் மோகன் ஆகியோா் முன்பு ஆகஸ்ட் 25-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனா்.
இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தா் மோகன் அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, தனிநீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை ரத்து செய்து, கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது. தனி நீதிபதி அளித்த தீர்ப்பு ஓபிஎஸ்ஸுக்கு ஆதாரவாக பார்க்கப்பட்ட நிலையில், இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வந்துள்ளது. எனினும், இந்த தீர்ப்புக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.