கடந்த எட்டு ஆண்டுகளில், இந்தியாவில் உள்ள துறைமுகங்களின் திறன் இரட்டிப்பாகி உள்ளது, என மங்களூரில் நடந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
தட்சிண கன்னடாவின் மங்களூரில் உள்ள கோல்டன் பிஞ்ச் மைதானத்தில், நேற்று நடந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். மத்திய அரசு சார்பில் கர்நாடகாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 3,800 கோடி ரூபாய் மதிப்பிலான எட்டு திட்டங்களை துவக்கி வைத்தார். பின்னர் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-
இந்திய கடலின் சக்தி விஷயத்தில் இன்று பெரிய நாள். ராணுவம் மற்றும் பொருளாதார விஷயத்தில் நாடு இன்று பெரிய அளவில் சாதனை படைத்துள்ளது. கொச்சியில், இந்தியாவின் முதல் விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ்., விக்ராந்த் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய விஷயமாகும். மீனவர்களின் உற்பத்தி பொருட்களை சர்வதேச அளவுக்கு சென்றடைய செய்வது இன்னும் சுலபமாகி விட்டது. நாட்டின் முன்னேற்றத்துக்கு ‘மேக் இன் இந்தியா’ முக்கியமாகும். வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க, உற்பத்தி மண்டலத்தை விஸ்தரிப்பது மற்றும் ‘மேக் இன் இந்தியா’வை விஸ்தரிப்பது மிக முக்கியம். அது மட்டும் அல்லாமல், நாம் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். இதற்கு முந்தைய ஆண்டுகளில், நாட்டின் துறைமுகங்களை வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் என்ற குறிக்கோளை கொண்டிருந்தது. இதன் பலனாக, எட்டு ஆண்டுகளில் இந்திய துறைமுகங்களின் திறன் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளன.
சாகர் மாலா திட்டத்தின் பலனை கர்நாடகா அதிகமாக பெற்றுள்ளது.தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள், 2014ம் ஆண்டுக்கு பின் நான்கு மடங்கு ரயில்வே திட்டங்களுக்கான நிதி கர்நாடகாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை துறையில், எட்டு ஆண்டுகளில் 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட பணிகள் நடந்துள்ளது. இன்னும் 1 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஏழைக்கு ஒரு கஷ்டம் ஏற்பட்டால் அந்த குடும்பமே சிரமத்தில் தவிக்கும். ‘ஆயுஷ் மான்’ பாரத் திட்டம் நாட்டில், 4 கோடி ஏழைகளுக்கு உதவியாக இருந்துள்ளது. கர்நாடகாவில் 30 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். கர்நாடக மீனவர்களின் வளர்ச்சிக்காக, மீன்வளம் தொடர்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கடலோரம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை, சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு ஏற்ற சிறந்த இடங்களாக உள்ளன. சுற்றுலாத் துறையின் வளர்ச்சி பலருக்கும் லாபத்தை கொடுக்கும் வாய்ப்பு உள்ளது.
கர்நாடகாவில், ‘டபுள் இன்ஜின்’ அரசு மக்களின் தேவைகளை நிறைவேற்ற பகலிரவாக பாடுபட்டு வருகிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் மெட்ரோ ரயில் இணைப்பு கொண்டுள்ள நகரங்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. ‘கிளீன் எகானமி’ மூலம் ஆன்லைன் பரிவர்த்தனை சிறப்பாக நடக்கிறது. ‘பீம்’ போன்ற பல்வேறு செயலிகள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர்கள் கர்நாடகாவை சேர்ந்தவர்களாக உள்ளனர். ராணி சென்னம்மா, அப்பக்கா போன்ற வீர பெண்மணிகள் மற்றவர்களுக்கு உதாரணம். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு, மத்திய கப்பல் மற்றும் துறைமுகங்கள் துறை அமைச்சர் சர்பானந்தா சோனேவால், மைசூரு தலைப்பாகை, மாலை அணிவித்து, உடுப்பி ஸ்ரீகிருஷ்ணர் சிலையை வழங்கினார். மாநில பா.ஜ., தலைவர் நளின் குமார் கட்டீல் மல்லிகை மாலை அணிவித்தார். மாவட்ட பொறுப்பு அமைச்சர் சுனில் குமார், பரசுராமன் சிலையை அளித்தார்.