கோவிட், உக்ரைன் போர்: இந்தியாவின் உதவிக்கு வங்கதேச பிரதமர் நன்றி!

கோவிட் தடுப்பூசி வழங்கியும், உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலின் போதுஅங்கு சிக்கி தவித்த இந்திய மாணவர்களுடன் வங்கதேசத்தை சேர்ந்த மாணவர்களை மீட்டதற்காக பிரதமர் மோடிக்கு, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நன்றி தெரிவித்துள்ளார்.

அரசு முறை பயணமாக ஷேக் ஹசீனா இன்று இந்தியா வருகிறார். இது தொடர்பாக அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திய போது, இந்தியா அளித்த உதவிக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உக்ரைனில் சிக்கி தவித்த வங்கதேச மாணவர்கள், அடைக்கலம் கேட்டு, போலந்து வந்தனர். அங்கிருந்து இந்திய மாணவர்களுடன் வங்கதேச மாணவர்களையும் இந்திய அரசு பாதுகாப்போடு அழைத்து வந்தது. இதன்மூலம் தெளிவான நட்புறவை இந்தியா வெளிப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைக்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இந்திய அரசின் தடுப்பூசி திட்டத்தின் கீழ் நட்பு நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த தடுப்பூசிகள் வங்கதேசத்திற்கு மட்டுமல்லாமல், தெற்கு ஆசிய நாடுகளுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டது. இது மிகவும் உதவியாக இருந்தது. மோடி எடுத்த ஆக்கப்பூர்வமான முயற்சி இது. இது மட்டுமல்லாமல் எங்களது சொந்த பணத்திலும் தடுப்பூசி வாங்கி பயன்படுத்தினோம்.

கோவிட் பெருந்தொற்றை எதிர்கொண்டிருக்கிறோம். உக்ரைன் – ரஷ்யா போரை பார்த்து வருகிறோம். அதனால் சில பாதிப்புகள் இருந்தாலும் எங்களது பொருளாதாரம் வலுவாக உள்ளது. கடன்களை உரிய காலத்தில் செலுத்தி வருகிறோம். இதனால், கடன் விகிதமும் கட்டுக்குள் உள்ளது பொருளாதார வளர்ச்சி திட்டமிட்டபடி செல்கிறது. இலங்கை போல பொருளாதார நெருக்கடியை வங்கதேசம் சந்திக்காது. இவ்வாறு ஷேக் ஹசீனா கூறினார்.