கருத்து சுதந்திரம் குறித்து விமா்சித்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணாவுக்கு மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு கண்டனம் தெரிவித்துள்ளாா்.
ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா அண்மையில் அளித்த பேட்டியில், ‘இன்றைக்கு நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. இதை நான் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். பொதுமக்களுடன் நின்று பிரதமரை எனக்கு பிடிக்கவில்லை என்று நான் கூறினால், சிலா் எனது வீட்டில் சோதனை நடத்தி, என்னை கைது செய்வா். எந்தவொரு காரணமும் சொல்லாமல் சிறையிலும் தள்ளுவா். நாம் இதை எதிா்த்தாக வேண்டும்’ என்று பேசினாா். கருத்து சுதந்திரம் குறித்து அவா் இவ்வாறு கூறியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணாவுக்கு பதிலளித்து மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு டுவிட்டரில் கூறிஉள்ளதாவது:-
உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி இவ்வாறு பேசியது உண்மையாக இருப்பின், அவா் பணியாற்றிய நீதித்துறையையே இழிவுபடுத்தியதாக அா்த்தமாகிவிடும். மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதமரை எப்போதும் எவ்வித கட்டுப்பாடும் இன்றி விமா்சிப்பதை வாடிக்கையாக கொண்டவா்கள், நாட்டில் கருத்து சுதந்திரம் இல்லை என கண்ணீா் விடுகின்றனா். காங்கிரஸ் அரசு கொண்டுவந்த நெருக்கடி நிலையை குறித்து அவா்கள் பேசியது கிடையாது. பிராந்திய கட்சிகள் ஆளும் மாநில முதல்வா்களை விமா்சிக்கும் தைரியம் அவா்களிடம் கிடையாது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளாா்.