வேதா நிலையம் விற்பனைக்கு அல்ல, குடியேற போகிறேன்: ஜெ தீபா

வேதா நிலைய இல்லம் எங்களது பூர்வீக சொத்து அதை நாங்கள் விற்பனை செய்யவில்லை என ஜெ தீபா மறுத்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அவருடைய அண்ணன் மகள் ஜெ தீபா மீடியா லைம்லைட்டில் அதிகம் பேசப்பட்டார். அதிமுகவை மீட்க எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை எனும் அமைப்பை தொடங்கி நடத்தி வந்தார். இந்த நிலையில் சில காலம் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார். அவ்வப்போது கணவர் மாதவனுக்கும் தீபாவுக்கும் இடையே குடும்பச் சண்டை நடைபெறும். எப்போதும் போல் சில நாட்கள் அல்லது மணி நேரங்கள் நீடிக்கும். அது போல் கடந்த சில தினங்களுக்கு முன்பும் மாதவனுக்கும் தீபாவுக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதில் மாதவன், தீபாவை விவாகரத்து செய்யுமாறு நிர்பந்தித்ததாக தீபாவே வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்திருந்தார். இந்த நிலையில் இதை மாதவன் மறுத்தார்.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை பராமரிக்கும் உரிமை பெற்ற ஜெ தீபா அந்த வீட்டை விற்பனை செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த தகவலையும் அவர் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

ஒரு மிகுந்த சட்ட போராட்டத்திற்கு பிறகே போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் என்ற பூர்வீக சொத்து , அதாவது எனது தந்தை ஜெயக்குமார் மற்றும் அத்தை ஜெயலலிதா ஆகியோரின் தாயான பாட்டி சந்தியாவால் கட்டப்பட்டு அவர் அந்த வீட்டில் வாழ்ந்து வந்தார்கள். பாட்டி சந்தியா இறந்த பிறகு உயில் மூலம் அத்தை ஜெயலலிதா அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. அதே நேரம் எனது தந்தை ஜெயக்குமாரும் வேதா நிலையத்தில்தான் வசித்து வந்தார். அந்த காலகட்டங்களில் எனது அத்தை சினிமா துறையில் நடிகையாக இருந்தார். எனது தந்தை ஜெயக்குமாரின் திருமணம் நடைபெற்றது. ஜெயலலிதா உள்ளிட்ட உறவினர்கள் திருமண விழாவில் கலந்து கொண்டனர். இதன் பிறகு எனது தந்தை ஜெயக்குமார், தாய் விஜயலட்சுமி, அத்தை ஜெயலலிதா ஆகியோர் வேதா இல்லத்தில்தான் பல காலமாக கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார்கள். இப்படியொரு சாதாரண இல்லமாதான் அந்த காலகட்டங்களில் அந்த வீடு இருந்தது. அந்த இல்லத்தில் என் தாய் தந்தை வசித்த போதுதான் நான் பிறந்தேன்.

சில காலம் கழித்து ஒரு சில கருத்து வேறுபாடுகளால் என் தாய், தந்தை அந்த வீட்டை விட்டு வெளியே வந்தனர். அவர்கள் திநகரில் உள்ள மற்றொரு பூர்வீக இல்லத்தில் வசித்து வந்தனர். எனினும் எனது அத்தையை பார்க்க நாங்கள் வேதா நிலையத்திற்கு சென்று வந்தோம். அப்போது அவர் வேதா நிலையத்திலேயே இருங்கள் என கேட்டதால் நாங்கள் அங்கேயே இருந்தோம். பின்னர் அவர் அரசியலில் ஈடுபட்டவுடன் அஙகிருந்து நாங்கள் மீண்டும் வெளியே வந்துவிட்டோம். என் தாய், தந்தையிடம் இருந்து நான் தெரிந்து கொண்டது இதுதான். எனவே வேதா நிலையம் எங்கள் பூர்வீக சொத்து என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. எனது பாட்டிக்கு பிறகு உயில் மூலம் அத்தைக்கு சென்றது. அத்தைக்கு திருமணம் ஆகாததால் எனது தந்தை மூலம் இந்த சொத்தை நானும் எனது தீபக்கும் திரும்ப பெற்றோம். எனவே அதை பராமரித்து வரும் நிலையில் வேதா நிலையத்தை நாங்கள் விற்கவில்லை.

வேதா நிலையமானது எனது பாட்டி சந்தியாவால் சம்பாதித்து கட்டப்பட்டது. இது எங்கள் பூர்வீக சொத்து. இதை யாரும் உரிமை கோர முடியாது. என்னை பொருத்தவரை எனக்கு அத்தை மட்டும்தான் தேவை. அவருடன் யார் இருந்தார், யார் போனார் என்பதெல்லாம் எனக்கு தேவையில்லை. எனது அத்தை பல பிரமிக்கத்தக்க பொறுப்புகளையும் பதவிகளையும் வகித்தவர். அப்படி இருந்த போது அவருக்கு உதவி செய்ய, பணிவிடை செய்ய, ஆலோசனை சொல்ல, என ஆயிரக்கணக்கானவர்கள் பயணித்திருப்பார்கள். அதற்காக அவர்கள் எல்லாம் உரிமை கோர முடியாது. குடும்ப உறுப்பினரும் ஆக முடியாது. ஜெயலலிதாவுடன் பயணித்ததாக சொல்லும் சசிகலாவுக்கு இது பொருத்தமானது. எனவே வதந்திகளை யாரும் கிளப்ப வேண்டாம். வேதா நிலையம் விற்பனைக்கு அல்ல. இவ்வாறு ஜெ தீபா தெரிவித்துள்ளார்.