சிபிஐ அதிகாரி தற்கொலைக்கு பாஜகவின் அழுத்தமே காரணம்?: மணிஷ் சிசோடியா

சிபிஐ அதிகாரி ஒருவர் தற்கொலை செய்துள்ள நிலையில், அவரது தற்கொலைக்கு பாஜகவின் அழுத்தமே காரணம் என்று டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா சாடியுள்ளார்.

டெல்லியில் மதுபான கொள்கைகள் அமல்படுத்தியதில் முறைகேடுகள் நடைபெற்றதாக மணிஷ் சிசோடியாவிற்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இது தொடர்பாக கடந்த மாதம் 19 ஆம் தேதி, மணிஷ் சிசோடியாவுக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை சோதனை நடத்தியது. மணிஷ் சிசோடியாவின் வீடு உள்பட 31 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக சிபிஐ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சோதனைக்குப் பிறகு மணிஷ் சிசோடியா உள்பட 15 பேர் மீது சிபிஐ வழக்கும் பதிவு செய்துள்ளது. எனினும், தனக்கு எதிரான குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்து வரும் மணிஷ் சிசோடியா, மத்திய அரசின் வழக்கமான பழிவாங்கும் நடவடிக்கையே இது என்று கூறி வருகிறார். மேலும், பாஜகவின் கைப்பாவை போல சிபிஐ அமைப்பு செயல்படுவதாகவும் ஆம் ஆத்மி அரசின் சிறப்பான செயல்பாடுகளால் குறிப்பாக கல்வித் துறையில் ஆம் ஆத்மி செய்து வரும் மாற்றங்கள் பாஜகவை கலக்கம் அடைய செய்து இருப்பதாகவும் சாடியிருந்தார்.

இந்த நிலையில், தனக்கு எதிராக போலி கலால் வழக்கை பதியுமாறு சிபிஐ அதிகாரி ஒருவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் இதனால், அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் மணிஷ் சிசோடியா திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மணிஷ் சிசோடியா இந்த தகவலை வெளியிட்டார். செய்தியாளர்கள் சந்திப்பின் போது மணிஷ் சிசோடியா கூறியதாவது:-

எனக்கு எதிராக போலியான கலால் முறைகேடு வழக்கு பதிவு செய்யுமாறு சிபிஐ அதிகாரி ஒருவர் வற்புறுத்தப்பட்டு இருக்கிறார். இதனால், ஏற்பட்ட கடும் மன அழுத்ததால் சிபிஐ அதிகாரி ஒருவர் இரண்டு தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. அதிகாரிகளை தற்கொலைக்கு தூண்டும் வகையில் ஏன் கடுமையான அழுத்தம் கொடுக்கப்படுகிறது என பிரதமர் மோடியை நான் கேட்கிறேன். உங்களுக்கு தேவையென்றால் என்னை கைது செய்யுங்கள். ஆனால், உங்கள் அதிகாரிகளின் குடும்பங்களை அழிக்காதீர்கள். பாஜக ஆளாத மாநிலங்களில் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்ப்பது குறித்து மட்டுமே பிரதமர் மோடி சிந்தித்து வருகிறார். ‘ஆபரேஷன் லோட்டஸ்’ மட்டும்தான் மத்திய அரசுக்கு இருக்கும் வேலையா?. இவ்வாறு அவர் கூறினார்.