மாணவர்கள் தவறு செய்தால் கண்டிக்க முடிவதில்லை: அன்பில் மகேஷ்

மாணவர்கள் தவறு செய்தால் ஆசிரியர்கள் கண்டிக்க முடிவதில்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ், பேசினார்.

சென்னை கலைவாணர் அரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2021-2022 ஆண்டிற்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதும், வெள்ளிப் பதக்கமும், 10,000 ரூபாய் ரொக்க பணமும் வழங்கப்பட்டது. மொத்தம் 393 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-

ஆசிரியர் தினமான இன்று தமிழக முதலமைச்சர் கல்வித்துறையில் புரட்சி ஏற்படுத்தக் கூடிய வகையில் இரண்டு மாபெரும் திட்டங்களை இன்றைய தினம் தொடங்கி வைத்து கல்வித் துறையின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். ஆசிரியர்களின் கோரிக்கைகள் முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரியத் தீர்வு காணப்படும்.

ஆசிரியர்களைச் சுதந்திரமாகச் செயல்பட விட்டாலே அவர்கள் மாணவர்களின் எதிர்காலத்தை மேலும் வளப்படுத்தி விடுவார் என்பதில் ஐயமில்லை. மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையேயான உறவு என்பது ரத்த பந்தத்தையும் தாண்டி மாணவர்களின் எதிர்காலத்தைப் பலப்படுத்தக்கூடிய வகையில் ஒரு சிறந்த உறவாக அமைந்துள்ளது. ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளின் எதிர்காலத்தைக் கூட பொறுப்படுத்தாமல் பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவர்களின் வாழ்வில் முன்னேற்றத்திற்கு பணியாற்றுகின்றனர். ஆசிரியருக்குச் சுதந்திரம் தேவை. அதை அளித்தாலே அவர்கள் மாணவர்களை வளப்படுத்திவிடுவர். ஆசிரியர்கள் கற்பிக்கும் பணிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் பதவி மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முதலமைச்சர் கவனத்திற்கு நிச்சயம் கொண்டு செல்லப்படும் . இப்போது தவறு செய்யும் மாணவர்களைக் கூட கண்டிக்க முடியாத நிலையில் தான் ஆசிரியர்கள் உள்ளனர். முன்பெல்லாம் கண்களை விட்டுவிட்டு மற்ற இடங்களில் அடிக் கொடுக்கலாம் எனப் பெற்றோர்கள் கூறுவார்கள். ஆனால் இன்றைக்கு அந்த மாதிரியான சூழல் இல்லை. காரணம் சமூக வலைத்தளங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பேசிய நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், “ஆசிரியர் கற்றுக் கொடுப்பது தான் ஒரு மனிதனின் வாழ்க்கையை நேர்த்தியாக வாழ வழி வகுக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த போதெல்லாம் அரசுப் பள்ளிகளின் தரம் மற்றும் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்களிடம் நல்ல பெயர் எடுப்பது மிகவும் கஷ்டம். ஆனால் மாணவர்கள் மத்தியில் அன்பில் மகேஷ் நல்ல மதிப்பும் நேசத்தையும் பெற்றுள்ளார்” என்றார்.