இங்கிலாந்து புதிய பிரதமர் லிஸ் டிரஸ்க்கு ராணி எலிசபெத் வாழ்த்து!

பிரிட்டன் பிரதமராகத் தேர்வான பிறகு, பிரிட்டன் அரசி எலிஸபெத்தை ஸ்காட்லாந்தின் பால்மரால் நகர் மாளிகையில் லிஸ் டிரஸ் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சமீபத்தில் தனது பிரதமர் பதவி மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ததால் தேர்தல் நடந்தது. இறுதி வாக்கெடுப்பில், இந்திய வம்சாவளியும், முன்னாள் நிதி அமைச்சருமான ரிஷி சுனக், 60,399 வாக்குகளும், வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் 81,326 வாக்குகளும் பெற்றனர். இதன் மூலம் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவராகவும், நாட்டின் புதிய பிரதமராகவும் லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, போரிஸ் ஜான்சன் நேற்று தனது பதவியிலிருந்து விலகினார். லண்டனில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறிய அவர், ஸ்காட்லாந்து பால்மோரல் அரண்மனையில் 96 வயதான ராணி இரண்டாம் எலிசபெத்தை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

அதைத் தொடர்ந்து, புதிய பிரதமராக டிரஸை நியமித்து ராணி எலிசபெத் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, ராணி எலிசபெத்தை நேரில் சந்தித்த டிரஸ் வாழ்த்து பெற்றார். அப்போது டிரஸ் தலைமையில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்க ராணி முறைப்படி வலியுறுத்தினார். ராணி எலிசபெத் வாழ்நாளில் பதவியேற்கும் 15வது இங்கிலாந்து பிரதமர் டிரஸ்.

லிஸ் டிரஸ் பிரதமராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக நிகழ்த்திய உரையில் கூறியிருப்பதாவது:

அதிக ஊதியம் பெறத் தக்க வேலைவாய்ப்பு, பாதுகாப்பான தெருக்கள், ஒவ்வொருவரும் தங்கள் தகுதிக்குரிய வாய்ப்புகளை எவ்விடத்திலும் பெறக் கூடிய வகையில் முன்னோடி நாடாக பிரிட்டனை மாற்றுவேன். அத்தகைய மாற்றத்துக்காக, இன்றைய தினம் முதல் ஒவ்வொரு நாளும் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவேன். வரிக் குறைப்பு மற்றும் சீா்திருத்தங்களின் மூலம் நாட்டின் பொருளாதாரம் வளா்வதற்கான வலுவான திட்டம் என்னிடம் உள்ளது. பிரெக்ஸிட், கொரோனா தடுப்பூசி விநியோகம், ரஷ்யாவின் போருக்கு எதிரான நிலைப்பாடு ஆகியவற்றுக்காக போரிஸ் ஜான்சன் வரலாற்றில் பெரும் ஆற்றல் வாய்ந்த பிரதமராக நினைவுகூரப்படுவாா். இவ்வாறு அவர் கூறினாா்.

புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சூவெல்லா பிரேவர்மன் (42) உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். வழக்குரைஞரான இவர் பிரிட்டனின் அட்டர்னி ஜெனரலாக உள்ளார். போரிஸ் ஜான்சன் பதவி விலகியதும் பிரதமர் பதவிக்கான போட்டியில் சூவெல்லாவும் களமிறங்கினார். எனினும், கட்சியினரிடையே போதிய ஆதரவு பெறாததால், முதல் சுற்றிலேயே போட்டியிலிருந்து விலகினார்.
போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பதவி வகித்த பிரீதி படேலும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.