முந்திரிக் கொத்து

பச்சைப்பயிறு உடலுக்கு வலுவைத் தரும் ஒரு அற்புதமான தானியம். இதை அடிக்கடி சேர்த்துக்கொள்வது உடம்புக்கு ரொம்ப நல்லது. அதுவும் வளரும் குழந்தைகளுக்கு இது மிகவும் நல்லது.. பச்சைப்பயரில் இப்படியொரு பலகாரமானு ஆச்சர்யப்படாமல் செஞ்சு சாப்பிட்டுப் பாருங்க.. பிரமாதம்னு அப்பறம் சொல்லுவீங்க..

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 1/2 கிலோ
பச்சைப்பயிறு – 1/2 கிலோ
வெல்லம் – 1 கிலோ
ஏலக்காய் – 10
மைதா – 1/4 கிலோ
எண்ணெய் – 1/2 லிட்டர்
உப்பு – 1/2 டீ ஸ்பூன்

செய்முறை:

முதலில் வாணலியை அடுப்பில் வைத்து பச்சரிசி, பச்சைப்பயிறு ஆகிய இரண்டையும் தனித்தனியே வறுத்துக் கொள்ளவும்.

5 ஏலக்காயை மட்டும் எடுத்து தனியே வறுத்துக் கொள்ளவும்.

வறுத்த பச்சரிசி, பச்சைப்பயிறு, ஏலக்காய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மாவு மிஷினில் கொடுத்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலி அல்லது வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து, வெல்லத்தை உடைத்துப் போட்டு, வெல்லம் மூழ்கும் வரை தண்ணீ­ர் விட்டு காயவிடவும்.

மீதமுள்ள 5 ஏலக்காயை தனியே வறுத்து பொடியாக்கி அடுப்பில் காய்ந்து கொண்டுள்ள வெல்லத்துடன் சேர்க்கவும்.

வெல்லம் கரைந்து பாகு கொதித்து பிசுபிசுப்பு பதம் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி, மிஷினில் அரைத்து வைத்துள்ள மாவை வாயகன்ற பாத்திரம் அல்லது பேசினில் சிறிது சிறிதாகப் போட்டு அதில் தேவையான அளவு பாகு சேர்த்து, கட்டியில்லாமல் சப்பாத்தி மாவு பதத்திற்கு, கையில் மாவு ஒட்டாமல் பிசையவும்.

பின்னர் மாவைச் சிறு சிறு உருண்டைகளாக, கோலி குண்டு அளவிற்குப் பிடித்துக் கொள்ளவும்.

தனியே ஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன், உப்பு, தண்­ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்ததும், தீயை மட்டுப்படுத்தி மிதமான தீயில் எரிய விடவும்.

பின்பு உருட்டி வைத்துள்ள உருண்டைகளை மூன்று மூன்றாக எடுத்து ஒன்றாகச் சேர்த்து, கரைத்து வைத்துள்ள மைதா மாவில் முக்கி வாணலியில் உள்ள எண்ணெயில் போட்டு வேக விடவும்.

ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபக்கம் வேக விடவும்.

மைதா மாவு தீய்ந்து விடாமல் எண்ணெயிலிருந்து எடுக்கவும்.

எண்ணெய் வடிந்ததும், சூடாகவும் சாப்பிடலாம், பத்து நாட்கள் வரை, காற்று புகாத டப்பாவில் பாதுகாத்து வைத்தும் சாப்பிடலாம்.

குறிப்பு:

பிசுபிசுப்பு பதம் என்பது பாகு காயும் போது பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரலில் பாகை தொட்டு ஒட்டிப் பார்த்தால் பிசுபிசுவென்று ஒட்டும்.

மிஷினில் அரைத்த மாவு அனைத்தையும் ஒரே நேரத்தில் பிசையாமல் சிறிது சிறிதாக எடுத்துக் கொண்டு அதனுடன் பாகு சேர்த்து கட்டியில்லாமல் பிசைந்து கொள்ளவும்.

மூன்று உருண்டைகள் ஒன்றாகச் சேர்ந்து முந்திரிக் கொத்து போல் காட்சியளிப்பதால், இது அவ்வாறு பெயர் பெற்றுள்ளது. ஆனால் இதில் முந்திரி சேர்க்கப்படவில்லை என்பதுதான் இதன் விசேஷம்.

பச்சரிசி, பச்சைப்பயிறு, ஏலக்காய் ஆகியவற்றை மிக்சியில் அரைக்காமல் மாவு மிஷினில் அரைத்தால் மாவு மிகவும் வாசனையாக இருக்கும்.