நீட் தேர்வில் தோல்வியடைந்ததால், சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வால் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா தொடங்கி நீட் தேர்வு தொடர்பான மரணங்கள் தொடர் கதையாகி வருகிறது. நடப்பாண்டில் மட்டும் சென்னையைச் சேர்ந்த தனுஷ், ஓசூரைச் சேர்ந்த முரளிகிருஷ்ணா, அரியலுர் மாணவி நிஷாந்தி மற்றும் தென்காசி மாணவி ராஜலெட்சுமி என நீட் தேர்வு மரணங்கள் தொடர்ந்து வருகிறது. தமிழகத்தில் மாணவ, மாணவிகள் தற்கொலைக்கு தூண்டி வரும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, தமிழகத்தில் கிராமப்புற மாணவ, மாணவிகளின் மருத்துவக் கனவை, நீட் தேர்வு சிதைத்து வருகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ், சித்தா, யுனானி, ஆயுர்வேதம், நர்சிங் உள்ளிட்ட இளநிலை படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு, கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. சுமார் 18.72 லட்சம் பேர் தேர்வில் விண்ணப்பித்த நிரைலயில், 95% பேர் தேர்வு எழுதினர். நீட் தேர்வு முடிவுகள் நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் ஒரு லட்சத்து 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நீட் தேர்வு எழுதியிருந்த நிலையில், 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.
இந்நிலையில், சென்னை அம்பத்தூர் சோழபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவி லஷனா ஸ்வேதா என்ற மாணவி, நீட் தேர்வில் தோல்வியடைந்தார். இதனால், நீட் தேர்வு தோல்வியால் தனது மருத்துவக் கனவு கலைந்துவிட்டதாக எண்ணி சோகத்தில் இருந்துள்ளார். கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளான மாணவி லஷனா ஸ்வேதா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு தோல்வியால் மகள் தற்கொலை செய்து கொண்டதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக மகளை மீட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் பெற்றோர்கள் கதறி அழுத காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதுகுறித்த தகவலின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீட் தேர்வு முடிவுகள் வெளியான மறுநாளே, தேர்வில் தோல்வியடைந்த சென்னை மாணவி, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், பெற்றோர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். இது குறித்து அன்பில் மகேஷ் கூறியிருப்பதாவது:-
நீட் தேர்வு முடிவு வெளியாகும் நேரத்தில் எல்லாம் தமிழக அரசு வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருக்கிறது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற சட்டப்போராட்டம் தொடர்வதால் நல்ல தீர்வு கிடைக்கும் என நம்பிக்கையில் உள்ளது. நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.