அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கடந்த ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து தொடர்ந்த வழக்கில் அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும் கடந்த ஜூன் 23-ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில், தனிநீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை ரத்து செய்து, கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தா் மோகன் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
இதையடுத்து அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10 மணியளவில் பசுமைச் சாலையில் உள்ள இல்லத்தில் இருந்து புறப்பட்ட நிலையில், வழிநெடுங்கிலும் தொண்டர்களின் வரவேற்பை ஏற்று 11.30 மணியளவில் அதிமுக அலுவலகம் வந்தடைந்தார். தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் கட்சி தலைமை அலுவலகம் சென்ற பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
அதிமுக.,வில் பிளவு என்பது கிடையாது. கட்சிக்கு களங்கம் விளைவித்தவர்கள், துரோகம் செய்தவர்கள், எதிராக செயல்பட்டவர்கள் மீது பொதுக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. பன்னீர்செல்வம் மன்னிப்பு கேட்டால் தொண்டர்கள் எப்படி ஏற்று கொள்வார்கள். கட்சியின் உயர்ந்த பதவி வகித்த பன்னீர்செல்வம், கொள்ளை கூட்டத்திற்கு தலைமை வகித்து ரவுடிகளை டெம்போ வேனில் வந்து போலீஸ் உதவியுடன் கதவை உடைத்தனர். இப்படிப்பட்டவர்களை தொண்டர்கள் எப்படி ஏற்று கொள்வார்கள். தொண்டர்களுக்கு தான் கட்சி தவிர. தலைவர்களுக்கு அல்ல. கட்சி அலுவலகத்தை கொள்ளையடித்து சென்றால் தொண்டன் எப்படி மன்னிப்பான். தலைமை அலுவலகத்தை சேதப்படுத்தி கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டவர் பன்னீர்செல்வம். பச்சோந்தியை விட அதிகமாக நிறம் மாறுபவர் பன்னீர்செல்வம். திமுக துணையோடு அதிமுக பொதுக்குழுவை பன்னீர்செல்வம் சீர்குலைக்க முயன்றார். ராணுவ கட்டுக்கோப்போடு நடத்தி காட்டினோம். தொண்டர்களை சந்திக்கும் போது பன்னீர்செல்வத்திற்கு உண்மை புரியும். அவர் மன்னிப்பு கேட்டாலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
நீட் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் திமுக பொய் பேசி வருகிறது. தமிழகத்தை திமுக அரசு போதைப்பொருள் மாநிலமாக்கிவிட்டது. போதைப்பொருள் விற்பனை அதிகரித்து வருகிறது. அதன் புழக்கத்தை கட்டுப்படுத்தவும் தவறிவிட்டது. போதைப்பொருளை தி.மு.க.,வினர் விற்பனை செய்கின்றனர். காவல்துறை ஏவல்துறையாக மாறிவிட்டது. எது நல்லது கெட்டது என தெரியாமல் முதல்வர் ஆட்சி செய்கிறார். ஆன்லைன் ரம்மியை தடுக்க வேண்டும் என அனைத்து எதிர்க்கட்சிகளும் குரல் கொடுத்துள்ளன. ஆனால், துட்டு வந்து கொண்டுள்ளதால், அதனை நிறுத்த மாட்டார்கள். ஆன்லைன் ரம்மியை தடுக்க எதற்கு கருத்து கேட்க வேண்டும். ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள். என்ன நடந்தது என தெரியவில்லை. இனியாவது தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு பழனிசாமி கூறினார்.
முன்னதாக, பொதுக்குழு தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலும், அதிமுக அலுவலக கலவரம் குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் சூழலில் இபிஎஸ்ஸை அலுவலகத்திற்குள் செல்ல அனுமதிக்கக் கூடாது என்று இன்று காலை ஓபிஎஸ் தரப்பில் டிஜிபியிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.