படிப்பு போட்டியால் காரைக்காலில் தனியார் பள்ளி மாணவன், சக மாணவியின் தாயாரால் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அரசு மருத்துவமனையில் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்ற புகார் எழுந்ததை அடுத்து இரண்டு மருத்துவர்களை சஸ்பெண்ட் செய்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.
காரைக்கால் நகரப் பகுதியில் ஹவுசிங் போர்டில் வசித்து வரும் தம்பதியினர் ராஜேந்திரன், மாலதி இவர்களுடைய மகன் பால மணிகண்டன். ராஜேந்திரன் ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் பாலமணிகண்டன் நேரு நகரில் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். நன்றாக படிக்கும் மாணவரான மணிகண்டன் வகுப்பில் முதலாவதாக வருவார். கலை நிகழ்ச்சிகளிலும் ஆர்வமுடன் பங்கேற்பார். சில தினங்களுக்கு முன்பு மணிகண்டன் வாட்ச் மேன் கொடுத்த குளிர்பானத்தை குடித்து விட்டு பிற்பகலில் வீட்டிற்கு சென்றார். தனக்கு குளிர்பானம் கொடுத்து விட்டீர்களா என பெற்றோரிடம் கேட்டான். அதற்கு அவர்கள் இல்லை என்று கூறிய போது திடீரென சிறுவன் வாந்தி எடுத்து விட்டு மயங்கி விழுந்தான். அதனைப் பார்த்த பெற்றோர்கள் உடனடியாக காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் சென்றுள்ளனர் அங்கு சிகிச்சை அளித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலமணிகண்டன் உயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் நேரடியாக பாலமணிகண்டன் படித்த பள்ளிக்கு சென்று விசாரித்தனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் பாலமணிகண்டனுடன் படிக்கும் சகமாணவி அருள்மேரியின் தாய் சகாயமேரிதான் பள்ளி காவலாளி தேவதாஸிடம் எதையோ கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தன்னுடைய மகளை விட மாணவன் பால மணிகண்டன் நன்றாக படிப்பார் என்பதால் அவர் பால மணிகண்டனுக்கு விஷம் கொடுத்து கொன்றது தெரியவந்தது.
பால மணிகண்டன் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போது, காவல்துறையினரும் டாக்டர்களும் அலட்சியம் காட்டியதால் தான் மாணவன் உயிரிழந்தான். எனவே போலீஸ், டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். மாணவனின் பெற்றோரும் அரசு மருத்துவமனை மற்றும் போலீசார் மீது குற்றஞ்சாட்டினர். காரைக்கால் மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி வர்த்தகர்கள், அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் என அனைவரும் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். காரைக்கால் சமூக போராளிகள் என்ற வாட்ஸ் ஆப் குழுவினர் இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர். இதனைத் தொடர்ந்து இன்று காரைக்கால் மாவட்டம் முழுவதும் முழு அடைப்பு போராட்டமானது கடைபிடிக்கப்படுக்கிறது. காரைக்கால் மாவட்டத்தை பொறுத்தவரையில் சுமார் 500க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. காரைக்கால் மாவட்டத்தில் இருக்கக்கூடிய வாஞ்சூர், டி.ஆர்.பட்டினம், திருநள்ளாறு உள்ளிட்ட பிற பகுதிகளில் இருக்க கூடிய சாலைகளும் இன்று வெறிச்சோடி காணப்படுகிறது.
இதனிடையே காரைக்கால் பள்ளி மாணவன் பாலமணிகண்டன் உயிரிழந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர்கள் விஜயகுமார், பாலாஜி பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த விவகாரத்தை விசாரிக்க 3 பேர் கொண்ட மருத்துவ குழு அமைக்கப்பட்டது. மருத்துவ குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் புதுச்சேரி சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டது. சுகாதாரத்துறையினர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் 2 டாக்டர்களை சஸ்பெண்ட் செய்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.
