அணு ஆயுத திறனை வலுப்படுத்தும் எண்ணத்தை கைவிடமாட்டேன்: கிம் ஜோங் உன்

வடகொரியாவின் அணு ஆயுத திறனை மேலும் வலுப்படுத்தும் எண்ணத்தை ஒரு போதும் கைவிடமாட்டேன் என அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.

வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி அதிர வைத்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் வடகொரியாவின் 90-வது ராணுவம் நிறுவன தினத்தையொட்டி தலைநகர் பையாங்யாங்கில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இப்பேரணியின் போது ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்று கிம் ஜோங் உன் பேசியது, நமது நாட்டின் அணு ஆயுத திறன்களை வலுப்படுத்துவதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். நமது நிலத்தில் விரும்பத்தகாத சூழல் ஏற்பட்டால் நம்முடைய அணு ஆயுதங்கள் எந்த நேரத்திலும் பயன்படுத்த தயாராக இருக்க வேண்டும்” என்றார்.

இந்நிலையில் போர் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால், தங்கள் நாட்டை காப்பாற்ற அணு ஆயுதங்களை “தானாகவே” பயன்படுத்துவதற்கான சட்டத்தை வடகொரியா இயற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக வடகொரியா பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது அதிபர் கிம்ஜோங் உன் பேசியதாவது:-

அணு ஆயுதங்களை தானாகவே பயன்படுத்துவதற்கான சட்டம் நாட்டின் அணுசக்தி நிலையை உறுதிப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கை. நம் நாட்டின் அணு ஆயுத திறனை மேலும் வலுப்படுத்தும் எண்ணத்தை நான் ஒரு போதும் கைவிடமாட்டேன். இது தொடர்பாக வருங்காலத்தில் எந்த சமரச பேச்சுவார்த்தையும் கிடையாது. அமெரிக்காவுடன் ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளும் தென் கொரியாவின் நடவடிக்கை வடகொரியாவிற்கு ஆபத்தானது . இவ்வாறு அவர் கூறினார்.