வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றியை பெரும்: சசிகலா!

வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மகத்தான வெற்றியை பெரும் என சசிகலா கூறியுள்ளார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சூடு பிடித்திருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த ஊரான சேலம் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எனக் கூறிவரும் சசிகலா நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சாலை மார்க்கமாக சேலம் வந்த அவரை அவரது ஆதரவு நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்ற நிலையில் வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் தொண்டர்களிடையே பேசினார். சேலத்தில் சசிகலா வருகையை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா கூறியதாவது:-

நான் பெங்களூரு சிறையில் இருந்து வருகின்ற வரைக்கும் அனைவரும் ஒன்றாக தான் இருந்தார்கள். அப்போது நான் சொன்னது அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமைக்க வேண்டும் என்று கூறினேன். என்னுடைய வார்த்தை எப்போதும் ஒரே மாதிரியான வார்த்தையாக தான் இருக்கும். எம்ஜிஆர் மறைவுக்குப் பின்பு அந்த காலத்தில் இருந்த அமைச்சர்கள் தற்போது உள்ள பிரச்சினைகள் போல பேசினார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அனைத்தும் சீரானது. கழகம் ஒன்றாக சேர வேண்டும் என்பதற்காக அனைத்தையும் ஏற்றுக் கொள்வது தான் நல்லது.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கடும் மோசமாக உள்ளது. தமிழகத்தில் மின் கட்டணம் தற்பொழுது உயர்ந்துள்ளது. தொடர்ந்து 15 மாதங்களாக மக்களை கசக்கிப் பிழிகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் நீங்கள் பொதுச் செயலாளர் என்று கூறுகிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த சசிகலா, “பொறுத்திருந்து பாருங்கள். இன்னொரு வழக்கு நிலுவையில் உள்ளது. வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மகத்தான வெற்றியை பெரும். அதற்கு உண்டான பணிகளை நான் செய்து கொண்டுள்ளேன். மரணத்தில் அரசியல் திமுகவை பொருத்தவரை மக்கள் வெறுத்துப் போய் உள்ளனர்.

கொடநாடு கொலை வழக்கு குறித்த கேள்விக்கு விசாரணை செய்து கொண்டு உள்ளார்கள் என்று பதில் அளித்தார். உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அதை நீங்கள் தான் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார். அம்மாவுடைய மரணத்தில் மற்றவர்களெல்லாம் அரசியல் செய்து பார்க்கிறார்கள் ஆனால் மக்களுக்கு உண்மை எது என்று தற்போது புரிந்து விட்டது அதுவே எனக்கு போதும்” என்று பேசினார்.