ஆட்டோ டிரைவர் வீட்டில் இரவு உணவு அருந்த சென்ற அரவிந்த் கெஜ்ரிவாலை தடுத்த குஜராத் போலீசார்!

குஜராத்தில் ஆட்டோ டிரைவர் வீட்டிற்கு இரவு உணவு அருந்த அரவிந்த் கெஜ்ரிவால் சென்ற போது, போலீசார் அவரை தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேசிய அளவில் தனது கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளார். ஆம் ஆத்மி பல மாநிலங்களில் கட்சியைப் பலப்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் டெல்லிக்கு வெளியே பஞ்சாபில் முதல்முறையாகக் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடித்துள்ளார். இந்தாண்டு இறுதியில் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் தேர்தல் நடைபெறுகிறது. அங்குத் தனது முத்திரையைப் பதிக்கும் பணிகளில் ஆம் ஆத்மி ஏற்கனவே இறங்கிவிட்டது. அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ச்சியாக அங்கு பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். அவருக்கு மக்கள் ஆதரவு கிடைக்கும்பட்சத்தில் பாஜக- காங்கிரஸ்- ஆம் ஆத்மி என மும்முனை போட்டி அங்கு உண்டாகும்.

இந்நிலையில், நேற்றைய தினம் குஜராத்தின் அகமதாபாத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டு இருந்தார். அப்போது ஒரு கூட்டத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது இல்லத்திற்குச் சாப்பிட வருமாறு அழைப்பு விடுத்து இருந்தார். இதை ஏற்ற அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று இரவு உணவுக்கு அந்த ஆட்டோ டிரைவர் வீட்டிற்குச் சென்றார். அப்போது வழியிலேயே குஜராத் போலீஸ் அவரை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆட்டோவில் சென்று கொண்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவாலைப் பாதுகாப்பு காரணங்களால் அனுமதிக்க முடியாது என்று போலீசார் கூறியதாகத் தெரிகிறது. இது தொடர்பாக ஆம் ஆத்மி தனது டுவிட்டரில் வீடியோ ஒன்றையும் பகிர்ந்து உள்ளது. அதில் ஆட்டோவில் செல்லும் கெஜ்ரிவாலை போலீசார் நிறுத்துகிறார்கள். அப்போது போலீசாரிடம் கெஜ்ரிவால், “இதனால் தான் குஜராத் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். பாதுகாப்பு காரணங்களைக் கூறி மக்களிடம் செல்வதைத் தடுக்கிறீர்கள். ஏற்கனவே, இங்குள்ள தலைவர்கள் மக்களிடம் செல்வதில்லை. அவர்களிடம் முதலில் மக்களைச் சந்திக்கச் சொல்லுங்கள். எனக்கு உங்கள் பாதுகாப்பு தேவையில்லை. உங்கள் பாதுகாப்பை நீங்கள் வாபஸ் பெற்றுக்கொள்ளலாம்.. எங்களை ஏன் வற்புறுத்துகிறீர்கள்? நீங்கள் எங்களைப் பிணைக் கைதிகளைப் போல நடத்துகிறீர்கள்” என்று அவர் கூறுவது தெளிவாகக் கேட்கிறது. மேலும், கைது செய்ய முயல்கிறீர்களா என்று கெஜ்ரிவால் போலீசாரிடம் கேட்பதும் அதில் பதிவாகி உள்ளது. மேலும், பாதுகாப்பை வாபஸ் பெறுவது குறித்து ஆம் ஆத்மி கட்சி எழுத்துப்பூர்வமாகவும் கடிதம் அனுப்பத் தயாராக உள்ளதாக கெஜ்ரிவால் கூறுகிறார்.

இந்த சம்பவத்திற்குப் பின்னர் அவர் ஆட்டோ டிரைவர் வீட்டில் உணவு அருந்தச் சென்றார். அங்கு ஆட்டோ டிரைவருடன் இரவு உணவை அவர் உண்டார். இது தொடர்பான படங்களையும் கெஜ்ரிவால் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார், மேலும், அந்த ஆட்டோ டிரைவர் டெல்லி வந்தால் கண்டிப்பாகத் தனது வீட்டிற்குச் சாப்பிட வர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்து இருந்தார்.