ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 மீண்டும் கொண்டு வரப்படும்: மெகபூபா முஃப்தி

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370ஐ மீண்டும் கொண்டு வர முடியாது என்று குலாம் நபி ஆசாத் கூறியுள்ள நிலையில், அதற்கு மெகபூபா முஃப்தி பதிலடி கொடுத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து பல்வேறு மூத்த தலைவர்களும் தொடர்ச்சியாக விலகி வருகின்றனர். அப்படி சமீபத்தில் விலகியவர் தான் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத். ராகுல் காந்தியின் செயல்பாடுகள் காரணமாகவே காங்கிரஸில் இருந்து விலகியதாகக் குறிப்பிட்ட குலாம் நபி ஆசாத், காஷ்மீரில் புதிய கட்சியைத் தொடங்குவதாகவும் அறிவித்தார். காஷ்மீரில் முதலில் இந்த புதிய கட்சியைத் தொடங்கும் குலாம் நபி ஆசாத், பின்னர் இதை நாடு முழுவதும் விரிவுபடுத்துவது குறித்து பின்னர் முடிவெடுக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார். காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்படலாம் என கூறப்படும் நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. குலாம் நபி ஆசாத் இன்னும் 10 நாட்களில் தனது புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே பாரமுல்லாவில் பேசிய குலாம் நபி ஆசாத், “சட்டப்பிரிவு 370ஐ இனியும் மீட்டெடுக்க முடியாது. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருந்தால் மட்டுமே காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மீண்டும் கொண்டு வர முடியும். சட்டப்பிரிவு 370ஐ நீக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட போது, அதற்கு ஆதரவாக நான் வாக்களித்தாக சிலர் கூறுகின்றனர். அது பொய். உள்துறை அமைச்சர் இந்த மசோதாவை கொண்டு வந்த போது, அதற்கு எதிராகவே நாங்கள் வாக்களித்தோம். இதை வைத்து அரசியல் செய்வதை நான் விரும்பவில்லை. இதை வைத்துப் பொய் சொல்லி வாக்குகளைக் கேட்க மாட்டேன். என்னால் செய்ய முடியுமோ அதைப் பற்றி மட்டுமே பேசுவேன். பொய்யான வாக்குறுதிகள் குறித்துப் பேசமாட்டேன். காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு மக்கள் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என்று கூறி இருந்தார்.

காஷ்மீரின் முக்கிய தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத்தே இப்படிப் பேசியது பெரும் பேசுபொருள் ஆனது. காஷ்மீர் தலைவர்கள் மீண்டும் சட்டப்பிரிவு 370ஐ கொண்டு வரக்கோரி வலியுறுத்தி வரும் நிலையில், குலாம் நபி ஆசாத் அதற்கு வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார். இந்தச் சூழலில், குலாம் நபி ஆசாத்தின் இந்த கருத்துகளுக்கு மெகபூபா முஃப்தி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாகக் காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கூறுகையில், “அது அவரது (குலாம் நபி ஆசாத்) தனிப்பட்ட கருத்து. ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 மீண்டும் கொண்டு வரப்படும் என்பதை இங்குப் பலரும் நம்புகிறோம். ஒரு காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் காங்கிரஸ் குரல் எழுப்பி அவர்களிடம் இருந்து விடுதலை பெற்றது. அதேபோல தான் 370ஐ மீண்டும் கொண்டு வருவோம் என்று நம்பிக்கை உள்ளது. அதை நிச்சயம் மீண்டும் கொண்டு வருவோம்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.