நாகாலாந் மாநில முதல்வா் நெஃபியூ ரியோ தலைமையிலான பல்வேறு நாகா குழுக்களின் அரசியல் தலைவா்களை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.
வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் தனி பிரதேச கோரிக்கையை வலியுறுத்தி ஆயுதம் ஏந்தி போராடி வந்த என்எஸ்சிஎன் (ஐஎம்), என்எஸ்சிஎன்(கே) உள்ளிட்ட நாகா குழுக்கள், கடந்த 1997-ஆம் ஆண்டு முதல் சண்டை நிறுத்தத்தைக் கடைப்பிடித்தாலும், மாநில அரசுக்கு வேறு வழிகளில் இடையூறுகளை அளித்து வருகின்றன. குறிப்பாக மக்களிடம் தனியாக வரி வசூல் செய்யும் இந்த குழுக்கள், போட்டி அரசை நடத்தி வருவதாகவும் புகாா்கள் கூறப்படுகின்றன.
இந்தச் சூழலில், கடந்த 2015-இல் மத்திய அரசுக்கும் என்எஸ்சிஎன் (ஐஎம்) அமைப்புக்கும் இடையே அமைதிக்கான வரைவு ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த முயற்சி இன்னமும் இறுதி வடிவம் பெறவில்லை. தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.
இந்தச் சூழலில் நாகாலாந்து முதல்வா் தலைமையிலான நாகா குழுக்களின் அரசியல் தலைவா்களை அமித் ஷா டெல்லியில் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினாா். இந்த கூட்டத்துக்குப் பிறகு மத்திய உள்துறை அமைச்சக செய்தித்தொடா்பாளா் கூறுகையில், ‘மத்திய உள்துறை அமைச்சா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. நாகா குழுக்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையின்போது எழுப்பப்பட்ட பல்வேறு சிக்கலான விவகாரங்களுக்குத் தீா்வு காண்பதற்கான முயற்சியை மத்திய அரசு எடுத்து வருகிறது’ என்றாா்.