பா.ஜ., பிரமுகரும், பிரபல நடிகையுமான சோனாலி போகத், 43, மர்மமான முறையில் இறந்தது குறித்த வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
ஹரியானாவைச் சேர்ந்த நடிகை சோனாலி போகத். பா.ஜ.,வின் முக்கிய பிரமுகரமான இவர், கடந்த மாதம் 22ல், கோவாவில் விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது மர்மமான முறையில் உயிரிழந்தார். விசாரணையில், சோனாலியின் உதவியாளர்கள், அவருக்கு பானத்தில் வேறு எதையோ கலந்து குடிக்கக் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து சோனாலியின் உதவியாளர்கள் இருவர், விடுதி உரிமையாளர், போதைப் பொருள் கடத்தல்காரர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் பல மர்மங்கள் இருப்பதால், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடும்படி சோனாலியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். ஹரியானா முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான மனோகர் லால் கட்டாரும் இதே கோரிக்கையை விடுத்திருந்தார்.
இந்நிலையில், கோவா முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான பிரமோத் சாவந்த் நேற்று கூறியதாவது:-
சோனாலி மரண வழக்கில், கோவா போலீசார் திறமையாக விசாரணை நடத்தி சில உண்மைகளை கண்டுபிடித்துள்ளனர். ஆனாலும், சோனாலி குடும்பத்தினர் வற்புறுத்துவதால், இந்த வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து, இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க பரிந்துரைப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று மாலை அறிவித்தது.
இந்நிலையில் சோனாலி போகாட் கொலையில் தொடர்ந்து மர்மம் நிலவி வரும் நிலையில், அரசியல் பின்னணி இருப்பதாக அவரது சகோதரி ருகேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் ருகேஷ் கூறியதாவது:-
சிபிஐ விசாரணைக்குப் பிறகுதான் உண்மை வெளிவரும். கோவா போலீசாரின் விசாரணை எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. கோவா போலீசார் சொத்துக் கோணத்தில் வழக்கை விசாரித்து வருகின்றனர்.
கொலைக்குப் பின்னால் சில பெரிய நபர்கள் இருக்கலாம். சோனாலி அரசியல் காரணங்களுக்காக கொல்லப்பட்டிருக்கலாம், எனவே விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு அரசு அழுத்தம் கொடுத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.