முதல்வர் ஸ்டாலின் அதிமுகவை அழிக்க பார்க்கிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய 26 இடங்களில், விஜயபாஸ்கர் தொடர்புடைய 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஏற்கெனவே எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் இரண்டு முறை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. தற்போது மூன்றாவது முறையாக இந்த சோதனை நடைபெறுகிறது. கிராமப்புறங்களில் தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றியதில் 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் தற்போது இரண்டாவது முறையாக சோதனை நடைபெறுகிறது. தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி அளித்த விவகாரம் தொடர்பாக சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது. சோதனையைத் தொடர்ந்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருவதால், அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு திரண்ட தொண்டர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கூடியதால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் அதிமுகவை அழிக்க பார்க்கிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஜெயக்குமார், மின்கட்டண உயர்வை மக்கள் மறக்க இந்த சோதனை நடத்தப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் காவல்துறையை கையில் வைத்து அதிமுகவை அழிக்க பார்ப்பதாக குற்றம் சாட்டினார்.
காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அதிமுகவை ஒழிக்க நினைப்பதா என கேள்வி எழுப்பியுள்ளா அவர், காவல் துறையை ஏவல் துறையாக பயன்படுத்துகின்றனர். எதிர்க்கட்சிகளை செயல்பட விடாமல் தடுக்கவே இந்த சோதனை நடத்தப்படுகிறது எனவும் குற்றம் சாட்டினார்.
முன்னாள் அமைச்சர் சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வேலுமணி, விஜயபாஸ்கர் வீடுகளில் ரெய்டு நடக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை ஆளும் தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை. முந்தைய அதிமுக ஆட்சி கொண்டு வந்த திட்டங்களை தற்போதைய திமுக அரசு நிறுத்தி விட்டது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்காமல், உதயநிதியின் படத்திற்காக அமைச்சர் டிக்கெட் விற்று கொண்டிருக்கிறார். திமுக.,வின் 15 மாத ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளது. பால் விலை, சொத்து வரி,மின்சார கட்டணம் உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.