வெறுப்பு, வன்முறையை வைத்து தேர்தலில் வெற்றி பெறலாம், ஆனால் நாட்டுக்கு எதுவும் செய்ய முடியாது என்பதை பா.ஜ., நிரூபித்துள்ளதாக ராகுல் காந்தி பேசியுள்ளார்.
‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் செப்.,7ல் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணம் துவங்கிய காங்கிரஸ் எம்.பி., ராகுல், செப்., 10ம் தேதி தமிழகத்தை நிறைவு செய்தார். 4 நாட்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் 54 கி.மீ தூரம் நடைபயணம் மேற்கொண்ட ராகுல், செப்.,11 முதல் கேரளாவில் நடைபயணத்தை தொடர்ந்தார். இன்று 7ம் நாள் நடைபயணத்தை திருவனந்தபுரத்தை அடுத்த கழக்கூட்டம், கனியபுரம் பகுதியில் துவக்கினார். ராகுலுக்கு வழிநெடுக காங்கிரஸ் தொண்டர்கள், மக்கள் கையசைத்து வரவேற்பு அளித்தனர். இதுவரை 100 கி.மீ.,க்கு மேல் நடைபயணம் மேற்கொண்டதாக ராகுல் தெரிவித்துள்ளார். நடைபயணத்தின் இடையே மாமம் பூஜா ஆடிட்டோரியத்தில் ஓய்வெடுக்கிறார். அங்கிருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு இரவு 7 மணிக்கு கல்லம்பலம் சென்றடைகிறார். இரவு அங்கு தங்கும் ராகுல், நாளை காலை கொல்லம் மாவட்ட எல்லையான கடம்பாட்டு கோணம் பகுதியில் இருந்து நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.
இன்றைய நடைபயணத்தின்போது ராகுல் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‛வெறுப்பு, வன்முறையை வைத்து தேர்தலில் வெற்றி பெறலாம், ஆனால் நாட்டுக்கு எதுவும் செய்ய முடியாது. அதை பா.ஜ., நிரூபித்துள்ளது. வேலையின்மையையோ, விலைவாசி உயர்வையோ கோபத்தால் தீர்க்க முடியாது’ என மத்திய பா.ஜ., அரசை விமர்சித்திருந்தார்.