உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த 2000 மாணவர்கள் உட்பட மொத்தம் 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் உக்ரைனில் மருத்துவம் படித்து வந்தனர். இந்த நிலையில் அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. இதனால் அவர்கள் தப்பித்தோம்; பிழைத்தோம் என்று இந்தியா திரும்பினர். கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இந்த போர் தொடர்ந்து கொண்டுள்ளதால் அங்கு மருத்துவம் பயின்று வந்த இந்திய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகி உள்ளது. இதனையடுத்து, உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள், இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தாங்கள் படிப்பை தொடர அனுமதி உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், தேசிய மருத்துவ ஆணையத்தின் சட்ட விதிகளின்படி, உக்ரைன் மருத்துவ மாணவர்களை இந்திய கல்லூரிகளில் படிக்க அனுமதிக்க முடியாது என்று நீதிமன்றத்தில் மத்திய அரசு அண்மையில் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் இந்தியாவில் மருத்துவக் கல்வி தொடர உதவ வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில்,
‘உக்ரைனில் நிலவி வரும் போர் சூழலின் காரணமாக, மருத்துவப் படிப்பைத் தொடர முடியாமல் அந்நாட்டில் இருந்து தாயகம் திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள், இந்தியாவில் உள்ள தனியார் கல்லூரிகளில் தங்களது கல்வியைத் தொடர வாய்ப்பினை ஏற்படுத்தித் தர வேண்டும். வெளிநாடுகளில் படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்கள் தங்களுக்குப் பொருத்தமான வெளிநாட்டுக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை அடையாளம் காணுவதற்கு ஏதுவாக உரிய கட்டமைப்பினையும் ஏற்படுத்திட வேண்டும்’ என்று ஸ்டாலின் தமது கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.