மும்பை தாக்குதல் தீவிரவாதியை ஆதரிக்கிறதா சீனா?

இந்தியா மற்றும் அமெரிக்காவால் தேடப்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதியான சஜித் மிர்-ஐ சர்வதேச குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்கிற அமெரிக்காவின் தீர்மானத்தை சீனா நிறுத்தி வைத்துள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த சதி திட்டத்திற்கு மூளையாக செயல்பட்டவர்தான் சஜித் மிர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சதி திட்டத்திற்கு மூளையாக செயல்பட்ட சஜித், பாகிஸ்தானிலிருந்து இந்த திட்டத்திற்காக இந்தியாவிலிருந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளை இயக்கினார் என குற்றம் சாட்டப்பட்டது. இந்த தாக்குதலில் உயிரிழந்த 166 பேரில் 6 பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பதால் இதற்கு காரணமானவர்களை அமெரிக்காவின் சிஐஏ உளவு அமைப்பும் தேட தொடங்கியதில்தான் இந்த உண்மைகள் வெளிவந்தன. இதனையடுத்து சஜித்தின் தலையை கொண்டு வருபவர்களுக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசையும் அந்நாடு அறிவித்தது.

இதனைத் தொடர்ந்துதான் ஐநா சபையில், சஜித் மிரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என அமெரிக்கா தீர்மானத்தை முன்மொழிந்தது. இதற்கு இந்தியா தரப்பிலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த தீர்மானத்தை சீனா தனது அதிகாரத்தை பயன்படுத்தி கிடப்பில் போட்டு விட்டது. தற்போது சஜித் பாகிஸ்தானில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதேபோன்று ஏற்கெனவே உலக நாடுகள் நெருக்கடியை ஏற்படுத்தியபோது சஜித் இறந்துவிட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் கூறியிருந்தனர். ஆனால் உலக நாடுகள் இதனை நம்பவில்லை. இதற்கான ஆதாரத்தையும் கேட்டன. இந்த பின்னணியில்தான் இந்த தீர்மானத்தை அமெரிக்கா முன்மொழிந்துள்ளது. இந்த விவகாரத்தில் சீனாவின் செயல் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. சீனா இதுபோன்ற முடிவுகளை மேற்கொள்வது இதுதான் முதல் முறையானது அல்ல.

ஏற்கெனவே, ஜெய்ஷ்-இ முகமது தலைவர் மசூத் அசாரின் சகோதரரும் இந்த பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவருமான அப்துல் ரவூப் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று அமெரிக்காவும் இந்தியாவும் கோரிக்கை வைத்தபோது அந்த கோரிக்கையை சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.