ஊழல் வழக்கு: எடியூரப்பா, அவரது மகன் உள்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு!

பாஜக மூத்த தலைவர் பி.எஸ் எடியூரப்பா, அவரது மகனும், மாநில பாஜக துணைத் தலைவருமான பி.ஒய்.விஜயேந்திரா மற்றும் அவர்களது குடும்பத்தினர் மூவர் உள்பட 8 பேர் மீது ஊழல் வழக்கில் கர்நாடக காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

2019-2021-க்கு இடையில் எடியூரப்பாவின் ஆட்சி காலத்தில் பெங்களூரு பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (பிடிஏ) கீழ் புதிததாக குடியிருப்பு கட்டுவதற்கு ஒப்பந்ததாரருக்கு ஒப்பந்தம் வழங்கியதில் பிடிஏ தலைவராக இருந்த ஜி.சி.பிரகாஷ் மூலம் ரூ.12 கோடி சந்திரகாந்த் ராமலிங்கம் லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது. மேலும், சந்திரகாந்த் ராமலிங்கம் தொடர்புடைய 7 நிறுவனங்கள் மூலம் லஞ்சம் பணம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. லஞ்சம் பணம் எடியூரப்பா மகன் விஜயேந்திராவுக்கு சென்று சேரவில்லை என ஒரு உரையாடலும் வெளியானது. பின்னர், ஏற்கனவே முடிந்த ஒப்பந்த பணிகளுக்கான தொகையை வழஙகுவதற்கு மேலும் ரூ.12.5 கோடி லஞ்சம் கேட்டு பேரம் பேசப்பட்டதாகவும், இது தொடர்பாக சந்திரகாந்த் ராமலிங்கம், எடியூரப்பா பேரன் சசிதரன் பேசிய தொலைபேசி உரையாடலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

எடியூரப்பா முதல்வராக இருந்ததால் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்ய லோக் ஆயுக்தா நீதிமன்றம் முதலில் அனுமதி மறுத்த நிலையில், அனுமதி அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தொலைபேசி உரையாடல், ஏற்கனவே பெறப்பட்ட புகார் அடிப்படையில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா, கூட்டுறவு அமைச்சரும் முன்னாள் பிடிஏ தலைவருமான எஸ்.டி.சோமசேகர், முன்னாள் பிடிஏ தலைவர் ஜி.சி.பிரகாஷ், எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் சந்திரகாந்த் ராமலிங்கம் ஆகியோர் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டம் (பிசிஏ) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பெங்களூரு மேம்பாட்டு ஆணையத்தின் (பிடிஏ) வீட்டுத் திட்டத்தில் ஒப்பந்ததாரர்களிடமிருந்து எடியூரப்பா லஞ்சம் பெற்றதாகவும், எடியூரப்பாவின் குடும்பத்தினர் முதல்வர் அலுவலகத்தை தவறாக பயன்படுத்தியதாகவும், எடியூரப்பாவின் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு போலி நிறுவனங்களில் இருந்து பணம் கைமாறியதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவுப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு பதிலளித்த எடியூரப்பா, நீதித்துறை மீது தனக்கு முழு நம்பிக்கை உள்ளது. “இந்த குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை. இந்த வழக்குகள் எல்லாவற்றிலிருந்தும் நான் வெளியே வருவேன். இந்த விஷயங்கள் இயற்கையானது, அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை என்றும், தனக்கு எதிரான சதித்திட்டத்தின் விளைவுதான் இந்த வழக்கு என்று எடியூரப்பா கூறினார்.