தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது மக்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தமிழக அரசு மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி மதசார்பின்மை, சோஷியலிசம் போன்ற வார்த்தைகளை அரசியல் அமைப்பு சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனிப்பட்ட முறையில் தொடர்ந்த வழக்கா, இல்லை பா.ஜ.க. சார்பில் போடப்பட்ட வழக்கா என்று தெரியப்படுத்த வேண்டும். சுப்பிரமணிய சுவாமி தனிப்பட்ட முறையில் வழக்கு தொடுத்திருந்தால் அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும். பாரதிய ஜனதா ஒப்புதலோடு வழக்கு தொடுத்திருந்தால் பாரதிய ஜனதாவை தடை செய்ய வேண்டும். நாட்டு மக்கள் ஒற்றுமையை இது சீர்குலைப்பதாக உள்ளது.
இலங்கையில் உள்ள தமிழக மக்களின் உரிமையை உறுதி செய்ய வேண்டும். இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சூழ்நிலையில் தமிழக அரசு சார்பில் மருந்து, உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. தற்போது தமிழக மக்கள் வசிக்கும் இடங்களை ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதனால் தமிழக மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவியுள்ளது. எனவே தமிழக மக்கள் வசிக்கும் இடங்களை விட்டு ராணுவம் வெளியேற வேண்டும். தமிழர்களின் உரிமைகள், உடைமைகளை மீட்டெடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதோடு, இலங்கையில் உள்ள தமிழக மக்களின் உரிமையை உறுதி செய்ய வேண்டும்.
மத்திய அரசின் விலை ஏற்றத்தால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகிய நிலையில், தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது மக்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தமிழக அரசு மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.